மூளை பாதிப்பிற்குரிய சிகிச்சை
10 May,2026
எம்முடைய வீடுகளில் இருக்கும் முதிய உறுப்பினர்களுக்கு ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டால்.. உடனடியாக அவர்களுக்கு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்திய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதனை கவனியாமல் புறக்கணித்தால்.. அவர்களுக்கு செப்டிக் என்செலோபதி எனப்படும் பாதிப்பு மூளை சார்ந்த பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
குழப்பமான மனநிலை, அதீத சோர்வு , மயக்கம், கோமா நிலை, நினைவுத்திறன் இழப்பு ,நடத்தையில் மாற்றம், எரிச்சல் , அரிதாக வலிப்பு தாக்கங்கள் ..ஆகியவை ஏற்பட்டால்... உங்களுக்கு உடலில் ஏற்பட்டுள்ள அதிதீவிர தொற்று பாதிப்பின் காரணமாக மூளையின் செயல்பாடுகளில் பாரிய தடை ஏற்பட்டு இருக்கிறது என அவதானிக்கலாம். இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆபத்தான நிலை என்பதால்.. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சையை பெற வேண்டும்.
இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் இவர்களுக்கு எலக்ட்ரோஎன்செபலோகிராம் எனும் பரிசோதனையை மேற்கொண்டு மூளையின் செயல்பாட்டினை உறுதிப்படுத்துவர். உடலில் ஏற்படும் கடுமையான தொற்று காரணமாக மூளைக்கு செல்ல வேண்டிய குருதி ஓட்டம் இயல்பான அளவைவிட குறைவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தகைய தொற்று பாதிப்பிற்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை தொடர்பான பாதிப்பு ஏற்பட்டு மரணத்தையும் எதிர்கொள்ள கூடும்.
சிலருக்கு உடனடியாக எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.