நெஞ்சு வலியின் அறிகுறிகள் என்ன?
28 Feb,2026
இன்றைய சூழலில் எம்மில் பெரும்பாலானவர்கள் நடக்கும் போதும் மாடிப்படி ஏறும் போதும் அல்லது வணிக வளாகங்களில் தொடர்ச்சியாக திடீரென்று நடக்கும் போதும் முச்சிரைப்பின் காரணமாக திடீரென்று நெஞ்சில் கை வைத்து நெஞ்சு வலிக்கிறது என சொல்வர். அவர்களை உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தால் அவை சாதாரண நெஞ்சு வலியாகவே இருக்கும். உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அதாவது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய நெஞ்சு வலியாக இருப்பதில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் முழுமையாக பெற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீங்கள் ஏதேனும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது திடீரென்று ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு, பின்னர் வலி மறைந்தால் அவை மாரடைப்பு பாதிப்பிற்கான அறிகுறியாக அவதானிக்கலாம்.
ஆனால் சிலர் பயணத்தின் போதும் நடைபயிற்சியின் போதும் மார்பு பகுதியில் அசௌகரியத்தை உணர்வார்கள். இத்தகைய வலி சிலருக்கு இரண்டு மணி முதல் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். இவை ஆபத்தை ஏற்படுத்தும் நெஞ்சுவலி அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் அலுவலகத்திற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வரும்போது பேருந்து திடீரென்று புறப்பட்டால் அந்த பேருந்தை பிடிப்பதற்காக விரைந்து செல்லும்போது மார்பு பகுதியில் வலி ஏற்பட்டு, உங்களால் மேற்கொண்டு நடக்க இயலாமல் திடீரென்று அங்கேயே ஓய்வெடுக்க தோன்றி, உங்களது ஐந்து விரல்களையும் விரித்து நெஞ்சுப் பகுதியில் வைத்து உட்காரும் போது தான் ஆபத்தான மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி என்பது உணர்ந்து கொள்ளுங்கள்.
அதே தருணத்தில் உங்களுடைய ரத்த நாளங்களில் நூறு சதவீத அடைப்பு ஏற்பட்டால் ... நீங்கள் ஓய்வாக இருக்கும் போதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதும் நெஞ்சில் வலி ஏற்பட்டு... அந்த வலி சீராக உயர்ந்து கொண்டே செல்லும். இவை மிகவும் ஆபத்தான அறிகுறியாக அவதானித்து.. உடனடியாக ஒரு மணி தியாலத்திற்குள் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டியது இருக்கும்.
இந்த இரண்டு வகையினதான வலியை நீங்கள் துல்லியமாக உணர்ந்து அதற்கான சிகிச்சையை உடனடியாகவும் விரைவாகவும் பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வைத்தியர் சுபுஹானி