இதய பாதிப்பிற்கான சத்திர சிகிச்சையை உறுதி செய்யும் நவீன பரிசோதனை
07 Dec,2025
இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டதால் இளம் வயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்... அதற்கு சத்திர சிகிச்சை மூலமாகத்தான் முழுமையான நிவாரணத்தை பெற இயலும் எனும் நிலையில் இது தொடர்பான சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு எம்மில் பலரும் தங்களின் வயது, உடல்நிலை ஆகியவற்றின் காரணமாக தயக்கம் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் இதய ரத்த நாள அடைப்பிற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஃப்ராக்சனல் ஃப்ளோ ரிசர்வ் எனும் பிரத்யேக பரிசோதனை அறிமுகமாகி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாரடைப்பு அல்லது இதய பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுவார்கள். அந்தத் தருணத்தில் அவர்களுக்கு ஓஞ்சியோகிராம் எனப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனையில் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு மற்றும் அதன் சதவீதம் குறித்து அறிந்து கொள்ளலாம். அடைப்பினை அகற்றுவதற்கு வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள். ஆனால் முதுமையின் காரணமாகவும், அவர்களுக்கு உடலில் உள்ள நீரிழிவு , குருதி அழுத்த பாதிப்பு என வேறு சில காரணங்களால் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். இதுபோன்ற தருணத்தில் இதய ரத்த நாள அடைப்பு தொடர்பான சத்திர சிகிச்சையை மேற்கொள்வது சவாலானதாக மக்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் உயிரிழப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதயத்தில் உள்ள மூன்று முதன்மையான ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அங்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்வதா ? வேண்டாமா? என்பதனை துல்லியமாக அவதானிக்க தற்போது வைத்தியர்கள் ஃப்ராக்சனல் ஃப்ளோ ரிசர்வ் என்ற பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரை செய்கிறார்கள். இத்தகைய பரிசோதனை மூலம் உங்களுடைய ரத்த நாள அடைப்பின் குருதி ஓட்டத்தின் அழுத்தம் துல்லியமாக அவதானிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு ஸ்டென்ட் எனும் நிவாரண சத்திர சிகிச்சையை மேற்கொண்டால் பலன் அளிக்குமா? அளிக்காதா? என்பது குறித்தும் அவதானிக்கப்படுகிறது. அத்துடன் மூன்று முதன்மையான ரத்த நாளங்களில் எந்த நாளத்தில் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதையும் இத்தகைய பரிசோதனையின் மூலம் அவதானிக்கப்படுகிறது. அத்துடன் இத்தகைய பரிசோதனை , சத்திர சிகிச்சைக்கு முன்னரும், பின்னரும் மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நிவாரணமும் உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தற்போது இதய நாள இரத்த அடைப்பு பாதிப்பிற்கு துல்லியமாக அதிக அளவில் வெற்றி வீதத்தை அளிக்கக்கூடிய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இயலும் என வைத்தியர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.