நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் தரும் இன்சுலின் ஸ்பிரே
19 Nov,2025
தெற்காசிய நாடுகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் இருந்தாலும்.. தங்களுடைய உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையால் இளம் வயதிலேயே டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாவிட்டால்.. அவர்களுடைய உடலில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடையக் கூடும். இதனால் சர்க்கரை நோயாளிகள் ஆயுள் முழுவதும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
இந்நிலையில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக மருந்தியல் சிகிச்சை - உணவு முறை -உடற்பயிற்சி- ஆகியவற்றை ஒருங்கிணைந்து மேற்கொண்டாலும் சிலருக்கு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு வைத்தியர்கள் இன்சுலினை நேரடியாக பாவிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருப்பார்கள். இன்சுலினை ஊசி மூலம் செலுத்தும் நடைமுறைதான் தற்போது வரை உள்ளது. இந்நிலையில் இதில் நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக கருவி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் இன்சுலினை நோயாளிகள் ஊசி மூலம் செலுத்திக் கொள்வதுண்டு. இதனை செலுத்திக் கொள்ளும் முன்பும் , பின்பும் ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இன்சுலினின் அளவும் மாற்றத்திற்கு உட்பட்டது. இந்நிலையில் இன்சுலினை ஊசி மூலம் செலுத்திக் கொள்வதில் பலருக்கு பல தருணங்களில் அசௌகரியங்கள் ஏற்படுவதுண்டு. இதனை தவிர்க்கும் வகையில் தற்போது இன்சுலின் ஸ்பிரே எனும் கருவியின் ஊடாக உடலுக்குள் வாய் வழியாக செலுத்திக் கொள்ளும் சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த கருவி மூலம் வைத்தியர்கள் பரிந்துரைத்த இன்சுலினை நீங்கள் வாய் வழியாகவே பாவிக்கலாம். இதனை மருத்துவ மொழியில் ஓசலின் என குறிப்பிடுகிறார்கள். இது தற்போது இந்திய வைத்திய பொருட்களுக்கான சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. அத்துடன் மூக்கு வழியாக ஸ்பிரே செய்யும் பாணியிலும் இன்சுலின் அறிமுகமாகி இருக்கிறது. இதனை பாவிப்பதற்கு எளிதாக இருப்பதாகவும், ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் சர்க்கரை நோயாளிகள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள்.