புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம்
07 Aug,2025
இன்றைய போட்டிகளும் , பொறாமைகளும் நிறைந்த சமூக சூழலில் எம்முடைய மக்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு தற்போது இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இதற்கான நவீன சிகிச்சை முறைகளும் அறிமுகமாகி நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மருத்துவ மொழியில் தெர்மல் தெரபி என்றும் , ஹைப்பர்தெர்மியா என்றும் குறிப்பிடப்படும் நவீன சிகிச்சை நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய திகதியில் பெண்களையும், பெண்மணிகளையும் அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோயை கட்டுப்படுத்தி நிவாரணமளிப்பதற்கு அல்லது இதற்கு காரணமான புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு கீமோதெரபி- கதிர்வீச்சு சிகிச்சை- சத்திர சிகிச்சை ஆகியவற்றுடன் தற்போது தெர்மல் சிகிச்சை என்ற நவீன சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
பொதுவாக உணவு குழாய், அப்பென்டிக்ஸ், சிறுநீர்ப்பை, மூளை, தலை மற்றும் கழுத்து, கல்லீரல் , நுரையீரல், மலக்குடல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டால் இதற்கு கீமோதெரபி- கதிர்வீச்சு சிகிச்சை- சத்திர சிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைந்து மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர். இந்நிலையில் இந்த சிகிச்சையில் தற்போது ஹைப்பர்தெர்மியா எனப்படும் தெர்மல் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
ஹைப்பர்தெர்மியா என்பது எம்முடைய உடலில் உள்ள திசுக்களை 113 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பப்படுத்தப்பட்டு அதனூடாக புற்றுநோய் செல்களை சேதப்படுத்தி அழிக்கப்படுகிறது. இதற்காக தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட்டு அதனூடாக இத்தகைய தெர்மல் சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும் புற்றுநோய் பாதிப்பின் தன்மையையும், வீரியத்தையும் , அதன் நிலையையும் துல்லியமாக அவதானித்த பிறகு பல்வேறு வகையினதான ஹைப்பர்தெர்மியா சிகிச்சை அளிக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் மிக குறைவாகவே ஏற்படுகிறது. மேலும் இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளும் போது ஆரோக்கியமான திசுக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. இத்தகைய சிகிச்சை ஆண், பெண் என இரு பாலினத்தவர்களுக்கும் வயது வித்தியாசம் இன்றி பாவிக்கலாம் என்பதால் புற்று நோயாளிகளுக்கு கூடுதலான நிவாரணம் கிடைக்கிறது.