சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன கருவி
04 Aug,2025
இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் இதய செயலிழப்பு மற்றும் சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பு ஏற்படுகிறது . இதற்காக தற்போது நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட பிரத்யேக கருவி CRT-D முழுமையான நிவாரணத்தை வழங்கி வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வாழ்க்கை நடைமுறை மாற்றத்தாலும், உணவு முறை மாற்றத்தாலும் எம்மில் பலரும் மன அழுத்தம் தொடர்பான பாதிப்புகளுக்கு கடந்த தசாப்தங்களை விட அதிக அளவிற்கு முகம் கொடுக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு இதய துடிப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இதய செயலிழப்பு பாதிப்பும் உண்டாகிறது. இந்நிலையில் இதனை சீரமைக்க தற்போது இதயப் பகுதியில் பிரத்யேக நவீன கருவி பொருத்தப்பட்டு நிவாரணம் அளிக்கப்படுகிறது.
இதய செயலிழப்பு மற்றும் இதய துடிப்பில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டால் அவர்களுக்கு கார்டியாக் ரீசின்க்ரோனைசேஷன் தெரபி எனும் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பார்கள்.
இத்தகைய சிகிச்சையின் மூலம் பொருத்தப்படும் நவீன கருவிகள் இதய அறைகளை சீராகவும், சிறப்பாகவும் இயங்கச் செய்கிறது. இத்தகைய கருவி தற்போது சி ஆர் டி - டி ( CRT- D) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சாதனம் இதயத்தின் கீழ் அறைகளுக்கு மின் சமிக்ஞைகளை உரிய தருணத்தில் வழங்குகிறது. இதனால் இதய துடிப்பும், இதயத்தின் இயங்கு திறனும் சீரடைகிறது. இத்தகைய கருவியை இதயத்தில் பொருத்திக் கொண்டவர்கள் வைத்தியர்களின் அறிவுரை மற்றும் பரிந்துரையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும்.