சிறுநீர் வழியாக சீழ் வெளியேறினால் அதற்கான சிகிச்சை..?
23 Jun,2025
இன்றைய திகதியில் எம்மில் பலரும் வீடு, அலுவலகம் ,பயணம், பொழுதுபோக்கு பொது வெளி, என அனைத்து தருணங்களிலும் குளிர்சாதன வசதியை தொடர்ச்சியாக பாவிப்பதால் அதிக அளவில் தாகம் ஏற்படுவதில்லை.
அதையும் கடந்து தாகம் எடுத்தாலும் மிகக் குறைவாகவே நீர் அருந்துகிறோம். இதன் காரணமாக எம்மில் பலருக்கும் சிறுநீர் வெளியேறுவது தொடர்பான விவரிக்க இயலாத பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சிறுநீரிலிருந்து சீழ் வெளியேறினால் அதற்கான சிகிச்சை என்ன? என்பது குறித்து வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
பொதுவாக சிறுநீரில் வெள்ளை ரத்த அணுக்கள் அல்லது சீழ் சிலருக்கு வெளியேறும். இத்தகைய பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் தொற்று பாதிப்பு காரணமாக சிறுநீர்ப்பை, சிறுநீரகம் என பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு, இரத்த வெள்ளை அணுக்கள் வெளியேற தொடங்குகிறது. திசுக்களில் வீக்கம் ஏற்படும் போதும், அதில் எரிச்சல் ஏற்படும் போதும் அதனை எதிர்த்துப் போராட ரத்த வெள்ளை அணுக்கள் அப்பகுதியில் ஊடுருவுகிறது.
பாக்டீரியா தொற்றுகள் தான் இதற்கு முதன்மையான காரணமாகிறது. இவை பெரும்பாலும் சிறுநீரில் வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இது தொடர்பான அறிகுறி ஏற்பட்டவுடன் உடனடியாக வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
இத்தகைய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் அவை சிறுநீர்ப்பை புற்று நோயாக மாறி உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.
இது தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வைத்தியர்கள் சிறுநீரிலிருந்து சீழ் வெளியேறுகிறதா? அல்லது சிறுநீரில் கலந்து வெளியேறுகிறதா? என்பதனை துல்லியமாக அவதானிக்க பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.
மேலும் இத்தகைய தருணங்களில் குளிர் காய்ச்சல்+ சிறுநீர் வெளியேறும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகளும் இணைந்து கண்டறியப்பட்டால் இதற்கு பிரத்யேக பரிசோதனைகளின் மூலம் நோய் கிருமியை கண்டறிந்து, அதனை அழிப்பதற்கான நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.