இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டதால் இளம் வயதிலேயே இதய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளில் மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை மூலமாகவே தீர்வு காண இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய இடது பகுதியில் உள்ள இதய அறைகளுக்கு இடையேயான வால்வுகளில் ஏற்படும் பாதிப்பிற்கு தான் மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் என குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக இதய அறைக்குள் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது அல்லது தடைபடுகிறது. கீழ் இடது புற இதய அறை என்பது இதயத்தின் முக்கியமான பம்பிங் அறை. இதனை இடது வென்ட்ரிக்கிள் என்றும் குறிப்பிடுவர்.
மூச்சுத் திணறல், சோர்வு, சமச்சீரற்ற இதயத்துடிப்பு, தலை சுற்றல், மார்பக வலி, இருமல், கால் வீக்கம், நுரையீரல் பகுதியில் நீர்க் கோர்த்தல், இருமும் போது ரத்தம் வருதல் ஆகிய அறிகுறிகளை இத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும். சிலருக்கு ரூமாட்டிக் காய்ச்சல் ஏற்படக்கூடும்.
பொதுவாக ரூமாட்டிக் காய்ச்சல், இயல்பான அளவை விட கூடுதலாக கால்சிய படிம பதிவு ,கதிர்வீச்சு சிகிச்சை, பிறவி இதய குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்திய நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
இதற்கு உடனடியாகவும், முறையாகவும், முழுமையாகவும் சிகிச்சை பெறாவிட்டால் சம சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பு அதிகமாகும். அதனைத் தொடர்ந்து ரத்த உறைதல் ஏற்படும். சிலருக்கு குருதி அழுத்தம் உயர்ந்து நுரையீரல் செயல் திறன் பாதிக்கப்படும். வேறு சிலருக்கு வலது பக்க இதய செயலிழப்பு ஏற்படலாம்.
சிலருக்கு உயிரிழப்பு அச்சுறுத்தலும் ஏற்படக்கூடும். எனவே இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் எக்கோகார்டியோகிராம், இ சி ஜி, எக்ஸ் ரே ,சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.
இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் உங்களுடைய பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதன் பிறகு எம்மாதிரியான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதனை தீர்மானிப்பர். அதனைத் தொடர்ந்து நவீன சத்திர சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.