சிறுநீர் என்பது, உடல் வெளியேற்றும் தேவையற்ற நீராகும். இது உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள உடல் நடத்தும் செயல் எனலாம். இருப்பினும், வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பலரும் சிறுநீர் கழிப்பதை முடிந்தவரைத் தள்ளிப்போடுகின்றனர். ஆனால், இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்கின்றனர் சிறுநீரக நிபுணர்கள்.
குறிப்பாக, அடிவயிற்றில் உள்ள சிறுநீர்ப்பை, சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலிருந்து `யூரேட்டர்’ எனும் மெல்லிய குழாய் (Ureter) வழியாகச் சிறுநீர், சிறுநீர்ப் பையை அடைகிறது. `யூரித்ரா’ (Urethra) எனும் குழாய் வழியாகச் சிறுநீர் வெளியேறும். சிறுநீர் கழித்தவுடன், சிறுநீர்ப்பை சுருங்கி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.
இதனால், சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தால், சிறுநீர்ப்பை விரிவடைந்து கொண்டே செல்லும். மேலும், பல மணி நேரங்கள் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்குச் சிறுநீர் முழுவதுமாக வெளியேறாது. விட்டு விட்டுத்தான் வெளியேறும்.
இதே பழக்கம் தொடர்ந்தால், சிறுநீர்ப் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக்கூடும். அது, தேவையற்ற உடல், உபாதைகளுக்கு வழிவகுக்கும். அத்துடன், சிறுநீரை அடக்குவதால், சிறுநீரில் உள்ள உப்பு படிமம் சிறு சிறு படிமங்களாகச் சேர்ந்து கற்களை உருவாக்கும். பிறகு, இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும்.
ஆகவே, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடும் பழக்கத்தை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தினமும் எவ்வளவு சிறுநீர் கழிக்க வேண்டும்?
நாம், தினமும் சராசரி இரண்டு லீற்றர் தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியமாகும். அப்படி குடிக்கும்போது நமது உடல் இயக்கத்திற்குத் தகுந்தவாறு, சுமார் ஒரு லீற்றர் முதல் ஒன்றே முக்கால் லீற்றர் வரையிலும் சிறுநீர் வெளியாகும்.
அதேசமயம், நீரிழிவு நோயாளர்களுக்கு, சிறுநீர் அடிக்கடியும், அதிகமாகவும் வெளியேறும். அதற்கேற்ற தண்ணீர் தாகமும் இருக்கும். நீரிழிவு நோய் அல்லாத சிலருக்கு, ஹோர்மோன் கோளாறுகளால் அதிக சிறுநீர் வெளியாகும். இதனை, Diabetes Insipidus என்பார்கள்.
மேலும், ஒரு நாளைக்கு ஐநூறு மில்லி லிட்டர் அளவிற்குக் கீழ் குறைந்தால், oliguria என்று பெயர். சிறுநீரகங்கள் செயலழிக்கும் போது அவ்வாறு குறையலாம். சிலருக்கு எரிச்சலுடன் குறைவாகப்போகும். அது சிறுநீர் வழித்தொற்று அல்லது கல் போன்ற காரணங்களால் இருக்கும்.
சராசரியாக மனிதன் 3 முதல் 4 மணி நேரம் இடைவெளியில் சிறுநீர் கழிக்கப்படுகிறான். இந்த நேரத்தை கடந்து விட்டால் அவன் சிறு நீரை அடக்கி வைக்க முற்படுகிறான். அவ்வாறு கட்டுப்படுத்துவது ஆபத்தாக அமையலாம்.
அடுத்தது, சிறுநீர், பையில் தேங்கியிருந்தால் அதில் இருக்கும் பக்டீரியாக்கள் வளர்ந்து சிறுநீர்த் தொற்றை உண்டாக்கும். அதிகபட்சமாக 15 நிமிடங்கள் தேக்கி வைப்பதே போதுமானது. அதற்கும் மேல் தேக்கி வைத்தால் ஆபத்தான விளைவுகளை சந்திக்கலாம்.
எனவே சிறுநீர் கழிக்கும் போது முழுமையாக சிறுநீர் வெளியேற்றி விட்டு வரவேண்டும். இரவானாலும், பகலானாலும் சிறுநீர் வந்தால் வெளியேற்றி விடவேண்டியது அவசியம்.
விளைவுகள்
பொதுவாக, வயதான ஆண்கள், சிறுநீரை அடக்குவர். இதனால், புரேஸ்டேட் சுரப்பியில் தொற்று காரணமாக வீக்கம் (Prostatitis) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வீக்கத்தால் இவர்களுக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினாலும், முழுதாக சிறுநீர் வெளியேறாது. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். அரிதாக, இந்த வீக்கம் மலக்குடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரை அடக்குவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பேர் உள்ளனர். பயணங்களின்போது, பெண்கள் சிறுநீரை வெளியேற்றக் கழிப்பறைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் பெண்களுக்குச் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது.
கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவதால், கருவின் தலை பகுதி சிறுநீர்ப்பையை அழுத்த வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று வலி, சிறுநீர் போகிற இடங்களில் வலி எனத் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும்.
சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும்போது, நீர் வறட்சி (Dehydration), சோர்வு, தலைவலி, சருமப் பிரச்சினைகள், உடல் உஷ்ணம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
ஆகவே, இயற்கைக் கழிவுகளை அடக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சிறுநீரோ, மலமோ கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்த உடனே, கழித்துவிட வேண்டியது அவசியம்.