உலகெங்கும் மக்களின் ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால் மக்கள் தொகையில் முதியோர்கள் விகிதம் அதிரிக்கவே ஜப்பான், தென் கொரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரமும் சமூக வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
முதுமை என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு சிக்கலான பருவம். உலக அளவில் முதுமையின் தாக்கத்தை எதிர் கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு 2021ல் இருந்து 2030 ஆண்டு வரை “ஆரோக்கியமான முதுமைப் பத்தாண்டு” என்று அறிவித்தது. ஏற்கனவே அந்த முதுமை பத்தாண்டில் நாம் பாதியை கழித்துள்ளோம்.
கடந்த ஐந்தாண்டுகளில் உலகப் பார்வையை முதுமையின் நீண்டகால தாக்கத்தை சந்திக்க சுகாதார அமைப்புகள் மட்டுமல்லாமல், பொருளாதார நிலை, சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்களிடையே முதுமையப் பற்றிய கல்வி ஆகிய பிற அம்சங்களின் பால் திரும்பி இருக்கிறது.
இதை தொடர்ந்து, பல நாடுகளில், விஞ்ஞானிகள் தொடர்ந்து மூப்பினால் உடலில் ஏற்படும் தாக்கத்தை குறைக்கவும், அதே வேளையில் வயதான காலத்தில் ஏற்படும் நோய்களின் பாதிப்பை குறைப்பதிலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் நான் “ஸைன்டிஃபிக் அமெரிக்கன்” (Scientific American) வலை தளத்தில் படித்த டேவிட் ஃப்ரீட்மென் என்பவர் முதுமையின தாக்கத்தை பற்றி எழுதியிருந்த கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கட்டுரை “வயதான காலத்தில் நீடித்த ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தலைப்பில், எண்பது வயதை எப்போதோ கடந்த விட்ட என்னை ஒத்த வயதானவர்கள் தொடர்ந்து எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை ஆய்கிறது. முதுமை பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அந்தக் கட்டுரை விவரித்திருந்தது.
ஏற்கனவே, ஆராய்ச்சியாளர்கள், புழுக்களின் ஆயுளை பத்து மடங்கு வரை நீட்டிக்கும் வழி முறையை கண்டுபிடித்துள்ளனர். எலிகளுக்கு கூடுதலாக 50 சதவீத ஆரோக்கியமான நீண்ட ஆயுளை எவ்வாறு வழங்குவது என்பதையும் அவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். மேலும், நமது செல்லப்பிராணிகளை, முக்கியமாக நாய்களின் ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்கும் வழி முறைகள் இப்போது சோதிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் 90 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியுமா என்ற கேள்விக்கு இது வரை முழு விடை காணவில்லை என்றே தோன்றுகிறது. வயதானதால் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை அறிவியல் உதவி கொண்டு தாமதப்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர் பலர் நம்புகிறார்கள்.
விலங்குகளில் மூப்பின் தாக்கத்தை குறைக்கும் மருந்துகள் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக அதே நன்மைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதற்கான மருத்துவ பரிசோதனைகளை செய்வதில் பல ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வயதான ஆராய்ச்சி கூட்டமைப்பின் அறிவியல் இயக்குனராக உள்ள ஸ்டீவ் ஆஸ்டாட் இந்த ஆராய்ச்சியில் கடந்த 30 ஆண்டுகளில் காணாத உற்சாகத்தை, தற்போது காண்பதாக கூறியுள்ளார்.
மூப்பின் தாக்கத்தை குறைத்து ஆரோக்கியமான ஆண்டுகளை நீட்டிக்க தேவையான மருந்துகளுக்காக நாம் பல தசாப்தங்களாக காத்திருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே, 70 வயதைத் தாண்டிய மக்களை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவ தனிப்பட்ட சுகாதாரத் தரவுகளை (health data) சேகரித்து பட்டியலிடுவதற்கான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.
"நீங்கள் 90 வயதைத் தாண்டி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவாக இருக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் யதார்த்தமானது" என்று கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மரபணுவியல் புரட்சிக்கு முன்னோடியாக உதவிய லெராய் ஹூட் கூறுகிறார். எண்பத்தி ஆறு வயதான ஹூட், தற்போது உடல்நலம் தொடர்பான ஃபீனோம் ஹெல்த்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இன்ஸ்டிடியூட் ஃபார் சிஸ்டம்ஸ் பயாலஜியின் இணை நிறுவனராகவும் உள்ளார்.
மூப்பின் தாக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சி, மக்களின் வாழ்க்கையில் ஆண்டுகளைச் சேர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. அதற்கு மாறாக, அந்த கூடுதல் ஆண்டுகளை ஆரோக்கியமானதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது. கடந்த நூற்றாண்டுக்கும் மேலாக, மருத்துவ அறிவியல் முன்னேற்றங்கள் உலகம் முழுவதும் சராசரி ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவியுள்ளன.
ஆனால், மக்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கும் சராசரி ஆண்டுகளின் எண்ணிக்கை, அவர்களின் ஆயுட்காலம் போல வேகமாக வளரவில்லை.
அந்த இடைவெளியைக் குறைக்க, வயதான அறிவியல் ஆயுட்காலத்தை விட வயதான காலத்தில் நல்வாழ்வின் சுகாதாரத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பில் ‘”ஹெல்த்ஸ்பான்” (Healthspan) இதற்கான ஒரு முக்கியமான அளவீடாகும். இதை விவரித்த இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் முதிர்ச்சி இயல் பேராசிரியர் ஜோவாவ் பெட்ரோ டி மாகல்ஹேஸ் "நாங்கள் உடல் நலிவு காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை, அது மக்களை நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்படுத்துகிறது, ஆகவே 20 வயது இளையவரின் ஆரோக்கியத்துடன் ஆயுட்காலத்தை நீட்டிப்பதே எங்கள் குறிக்கோள்" என்று கூறுகிறார்.
முதுமையான மக்களை ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் வைத்திருப்பது அவர்களின் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகின்றது. அது மட்டுமல்லாமல், அதிகமாகி வரும் சுகாதார மற்றும் பொருளாதார சுமைகளிலிருந்து அவர்கள் விடுபடவும் அது உதவும்.
ஆராய்ச்சி அணுகுமுறைகள்
முதுமையில் ஏற்படும் முக்கியமான மாற்றம் நமது உடலின் உயிரணுக்களில் (செல்) ஏற்படுகிறது. முதுமையில் உயிரணுக்கள் தொடர்ந்து பிரிந்து விருத்தி செய்யும் தமது திறனை இழக்கின்றன. ஆகவே, அத்தகைய விருத்தி செய்யும் திறன் இழந்த உயிரணுக்கள் நமக்கு முதுமையில் அதிகரிக்கின்றன. அவற்றை அகற்றுவதின் மூலம் முதுமை எதிர்ப்பு மருந்துகள் செயல்திறன் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
ஆகவே அத்தகைய செல்களைக் கொல்லும் மருந்துகளில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த மருந்துகள் மனிதர்களில் முதுமையை மெதுவாக்குகின்றன என்பதற்கு இதுவரை தெளிவான சான்றுகள் இல்லை. ஆனால் அவை புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட விலங்குகளில் தோன்றும் பல்வேறு நோய்களில் சில நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
மனித நீண்ட ஆயுள் சோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மருந்து மெட்ஃபோர்மின் (Metformin) ஆகும். இது ஏற்கனவே உலகளவில் சுமார் 15 கோடி மக்களால் இரண்டாம் நிலை நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து விலங்குகளின் ஆயுட்காலம் நீட்டிப்பதற்கான சில ஆதாரங்கள் உண்டு. இதன் முதுமை எதிர்ப்பு பண்புகள் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக நாடு தழுவிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
இரசாயனங்கள் மூலம் வயதான செல்களை "புத்துணர்ச்சியூட்டுதல்" முதுமையின் தாக்கத்தை குறைக்க சோதனை அளவில் தற்போது உள்ள ஒரு அணுகுமுறையாகும். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக எந்த மருத்துவ பரிசோதனைகளும் அங்கீகரிக்கப்படவில்லை.இந்தியாவில் ஆயுர்வேதத்தில், காயகல்பம் என்பது புத்துயிர்ப்பு (rejuvenation) மற்றும் உயிர்ச்சக்தியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான, முதுமை எதிர்ப்பு சிகிச்சையின் ஒரு வடிவமாக விவரிக்கப்படுகிறது. "காயகல்பம்" என்ற சொல் உடல், மனம் மற்றும் ஆன்மாவை உள்ளடக்கிய "உடல் நிலை மறு மாற்றம்" என்று கூறலாம். இதில் செல்களின் புத்துயிர்ப்பு அடங்குமா என்று தெரியவில்லை.
இளம் வயதினரிடம் இருந்து முதியவர்களுக்கு இரத்த பிளாஸ்மா ஏற்றுவது மற்றும் ஒரு அணுகுமுறையாகும். ஆனால் அதன் செயலாக்கம் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த நுட்பத்தை உபயோகித்து இரத்த மாற்றம் செய்த பிறகு வயதான எலிகளில் பல்வேறு ஆரோக்கிய முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது. இரத்த மாற்றம் என்பது ஏற்கனவே பாதுகாப்பான செயல்முறை என்பதால், மருத்துவர்கள் அதனால் பலன் பெற விரும்பும் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகள் வழங்கப்படலாம். .
இந்தியாவில் முதியோர் நிலை
இந்தியாவில், 1950 ஆம் ஆண்டில் 5.4% ஆக இருந்த முதியோர்களின் விகிதம் (60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) 2015 ஆம் ஆண்டில் 9% ஆக உயர்ந்துள்ளது. வரும் 2050 ஆம் ஆண்டில் அது 19% எட்டும் என்று கூறுகிறது. அதாவது 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் வாழும் 166.8 கோடி மக்களில், சுமார் 32 கோடி முதியோராக இருப்பார்கள். இது நாட்டிற்கு கணிசமான சமூக, பொருளாதார மற்றும் சுகாதார சவால்களை ஏற்படுத்தும்.
முதியவருக்கு உதவ கூட்டுக்குடும்பங்கள் உதவின. குறைந்து வரும் கூட்டுக்குடும்பங்களின் தாக்கத்தை அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களில் காணலாம். இந்தியாவில் சுமார் 728 முதியோர் இல்லங்கள் இருப்பதாக 2022-ம் ஆண்டு மதிப்பீடு கூறுகிறது. இவற்றில் 547 இல்லங்களுக்கான விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 325 இல்லங்கள் இலவச தங்குமிட வசதியையும் மற்றும் 278 இல்லங்கள் உடல்நலப் பிரச்சினைகள் உள்ள மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன
ஆனால் வளர்ந்து வரும் முதியோர் எண்ணிக்கைக்கு இது போதவே போதாது.
நமது நாடு 32 கோடி முதியோரை 2050-ம் ஆண்டு எதிர்கொள்ள இப்போதிலிருந்தே தயார் படுத்த வேண்டும் என்பதில் ஐயமில்லை. முதியோர் இல்லங்கள் மற்றும் அந்த இல்லங்களில் முதியோர் உதவியாளர்களுக்கு விசேஷ பயிற்சி ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு இந்திய அரசு முதியோருக்கான தனது தேசிய கொள்கையை 1999-ல் அறிவித்தது.
இந்த கொள்கைப்படி முதியோருக்கான காப்பகங்கள், அவர்கள் சுகாதாரத்துக்கான விசேட வைத்தியசாலைகள், முதுமையை பற்றிய ஆய்வு மையங்கள், முதியோருக்கு பென்சன் உதவி ஆகியவை அடங்கும். ஆனால், முதுமை தவிர்க்க முடியாது என்றாலும் அதை எதிர் கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் தற்போது அதைப் பற்றிய உலகளாவிய ஆய்வைப் பார்த்தால் வருங்காலத்தில் முதுமையில் இளமை எதிர்மறையாகவே இருக்காது என்று தோன்றுகிறது.