அறிவுப்பல் (Wisdom tooth) அல்லது ஞானப்பல் என்பது நமது பற்களின் இரு புற மேல் மற்றும் கீழ்த்தாடைகளில் இரு புறமும் (மொத்தம் நான்கு) முளைக்கக்கூடிய மூன்றாவது கடைப்பல் (third molar tooth) ஆகும். சிலருக்கு இந்தப் பற்கள் முளைக்கும் வேளையில் சிக்கிக்கொள்ள (impacted) வாய்ப்புள்ளது. இவ்வாறு நேருமாயின் பல்லைப் பிடுங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக இந்த பல் 17 முதல் 25 வயதுக்குள் அதாவது ஒரு மனிதன் உலக அறிவைப் (ஞானம்) பெறும் வேளையில் முளைக்கும். ஆகவே இது அறிவுப் பல் அல்லது ஞானப்பல் என்று பெயர்பெற்றது.
இந்த ஞானப்பல்லால், சில நேரங்களில் புற்றுநோய் ஆபத்தும் ஏற்படலாம் என்கின்றார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
அதாவது, தாடைப் பகுதியில் ஞானப்பல் முளைப்பதற்குப் போதுமான இடம் இருந்தாலும், அது முளைத்து வரும்போது சம்பந்தப்பட்ட நபருக்கு எந்தப் பிரச்சினையும் கொடுக்காதபட்சத்திலும், ஞானப்பல்லை அகற்றவேண்டிய தேவை ஏற்படாது.
ஆனால், அது பாதிதான் முளைத்திருக்கிறது என்றாலோ, முளைக்கும் போதே வடிவம் மாறியிருக்கிறது என்றாலோ, அதைச் சுற்றியுள்ள ஈறு பகுதியில் கிருமிகள் சேர்ந்து தொற்று ஏற்படும்.
பாதி முளைத்த நிலையிலோ அல்லது முழுவதும் முளைத்தும் சரியாகப் பராமரிக்காததால் சொத்தையானதாலோ, அதுவும் ஆழமாக இறங்கி, பல்லின் வேர் வரை தொற்றை ஏற்படுத்தலாம்.
மேலும், பாதி முளைத்த நிலையிலோ அல்லது முழுவதும் முளைத்தும் சரியாகப் பராமரிக்காததால் சொத்தையானதாலோ, அதுவும் ஆழமாக இறங்கி, பல்லின் வேர் வரை தொற்றினை ஏற்படுத்தலாம். அதை 'பெரிகொரோனைட்டிஸ் ' (Pericoronitis) என்று அழைப்பார்கள்.
இந்நிலையில் அந்தப் பல்லைச் சுற்றி வீக்கம் இருக்கும். பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும் சிரமப்படுவார்கள். வாயின் வெளிப்பகுதியிலும் வீக்கம், காய்ச்சல் போன்றவை இருக்கலாம்.
அதேசமயம், ஞானப்பல் அமைந்த விதம் சரியின்றி, பக்கத்துப் பல்லை இடித்துக்கொண்டிருந்தாலோ, பக்கத்துப் பல்லில் தேய்மானத்தை ஏற்படுத்தினாலோ, ஞானப்பல்லின் வேரைச் சுற்றி கட்டி ஏற்பட்டாலோ கூட அந்தப் பல்லை அகற்றவேண்டியிருக்கும்.
ஞானப்பல்லின் அமைப்பு மாறியிருப்பதால் தசைக்குள் சிலர் அதைக் கடித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் அந்தப் பல்லை அகற்றவேண்டியிருக்கும்.
ஆகவே, ஈறுகளில் இரத்தம் கசிந்தால் பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சரியானது என்கின்றார்கள் மருத்துவ வல்லுநர்கள். காரணம், அது தசைப்பகுதியில் குத்தி, புண்ணாகி, நாளடைவில் புற்றுநோயாக மாறிவிடும் அபாயம் உள்ளதாம். அதனால், முன்கூட்டியே எச்சரிக்கையாகி, பல் மருத்துவரிடம் சென்று, அது புற்றுநோயா அல்லது புற்றுநோயல்லாத நிலையா என்று கண்டுபிடிக்க முடியுமாம்.
எனவே, ஞானப்பல் எத்தகைய பிரச்சினைகளை, அசௌகர்யங்களைத் தருகிறது என்பதைப் பொறுத்தே அதை அகற்றவேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ஞானப்பல் அடிக்கடி குத்தி, புண்களை ஏற்படுத்துகிறது, வீக்கம் வருகிறது என்றால் அது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் பாதுகாப்பானது என்று ஆலோசனை வழங்குகின்றனர் பல் மருத்துவ நிபுணர்கள்