இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகள் முழுவதிலும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டு மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது. சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு எம்முடைய மக்களிடத்தில் முழுமையாக ஏற்படவில்லை என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக ப்ரீடயபெடிஸ் என குறிப்பிடப்படும் டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முந்தைய நிலைக்கு சிகிச்சை பெற வேண்டுமா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடர்பான பதிலை வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு அளிக்கிறார்கள்.
நீரிழிவு நோய் பாதிப்பிற்கு முந்தைய நிலை என்பது உங்களுடைய குருத்தியில் ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட அதிகமாக இருப்பதை குறிக்கிறது. அதே தருணத்தில் இந்த ரத்த சர்க்கரையின் அளவு டைப் 2 டயபெடிஸ் எனப்படும் நீரிழிவு நோயாக மாறவில்லை என்றும், அதற்கு முந்தைய நிலை என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய இரத்த சர்க்கரையின் அளவினை கொண்டவர்கள் - 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு டைப் 2 நீரழிவு நோயை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு அதிகம். இதன் காரணமாக நீரிழிவு பாதிப்பிற்கு முந்தைய நிலைக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய தருணங்களில் முதலில் எச் பி ஏ ஒன் சி எனும் பரிசோதனையையும் அல்லது சாப்பாட்டிற்கு முன்பாகவோ சாப்பாட்டிற்கு பின்பாகவோ ரத்த சக்கரையின் அளவினை பரிசோதிக்க வேண்டும். இதில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்திருக்கும் அளவைவிட கூடுதலாக இருந்தால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை குறித்த அவதானம் துல்லியமாக வெளிப்படும்.
தோலில் நிற மாற்றம், பசி, தாகம் அதிகரித்தல் , சோர்வு , அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால், கை ஆகிய பகுதிகளில் உணர்வின்மை, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் மூலம் நீங்கள் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு முந்தைய நிலையில் இருக்கிறீர்கள் என்பதனை உணரலாம்.
இன்சுலின் உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மை , இன்சுலின் பற்றாக்குறை, மரபணு குறைபாடு ஆகிய காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதற்கு உரிய தருணத்தில் கவனம் செலுத்தி சிகிச்சை பெறாவிட்டால் அல்லது இந்த தருணத்தில் நீங்கள் தொடர்ந்து புகை பிடித்தாலோ மது அருந்தினாலோ பாதிப்பு அதிகமாகும். பெண்களுக்கு நீர்க்கட்டி பிரச்சனை ஏற்பட்டாலும், டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாகும். உறங்குவதில் அசௌகரியம் ஏற்பட்டாலும் அதன் காரணமாகவும் பாதிப்பு தீவிரமடையும்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் ரத்த சர்க்கரையின் அளவு மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்புவதற்கான வாழ்க்கை நடைமுறை, உணவு முறை , உடற்பயிற்சி குறித்த விடயங்களை விவரிப்பார்கள். இதனை உறுதியாக பின்பற்றினால் ரத்த சர்க்கரையின் அளவை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கலாம் அத்துடன் டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.