இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் கீழ்ப் பக்க முதுகு வலி, கால் வலி, கால் மூட்டு வலி ஆகிய பாதிப்பு ஏற்படுவது அதிகம். இதற்காக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரை சந்திக்கும் போது அவர் இது தொடர்பான சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்.
பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்த பிறகு உங்களுக்கு ஸ்பொண்டிலோசிஸ்டெசிஸ் எனும் முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ ரீதியிலான விளக்கத்தை தருவார்.
மேலும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய முதுகெலும்பு அதன் அமைப்பின் படி சீராக அடுக்கப்பட்ட எலும்புகளும், அதனை இணைக்கக் கூடிய உராய்வு இல்லாமல் இயக்குவதற்கு பிரத்யேக அம்சங்களும் உள்ளன.
இந்தத் தருணத்தில் விவரிக்க இயலாத பல்வேறு காரணங்களால் முதுகெலும்பில் உள்ள சில எலும்புகள் ஒத்திசைவுடன் இயங்காமல் தனித்து இயங்கினால் அதனால் ஏற்படும் அழுத்தம் வலியாக உணரப்படும். இதனை மருத்துவ மொழியில் ஸ்பொண்டிலோசிஸ்டெசிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
இது முதுகெலும்பில் எல் 4, எல் 5 ஆகிய எலும்புகளில் ஏற்படும் பாதிப்பு என்றும் குறிப்பிடலாம். இத்தகைய தருணத்தில் குறிப்பிட்ட எலும்புகளின் செயல்பாடு இயல்பாக இல்லாமல்.. அசாதாரணமான நிலையில் இருக்கும். இதனால் கால்களுக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
இது வலியை உண்டாக்கக் கூடியது. குறிப்பாக முதுகு வலி, கீழ் பக்க முதுகு வலி, கால் வலி ஆகிய பகுதிகளில் வலி தீவிரமாகவும், அதி தீவிரமாகவும் ஏற்படக்கூடும்.
அதே தருணத்தில் முதுகெலும்பில் அமைந்துள்ள அசைவு மூட்டுகளில் ஏதேனும் பலவீனம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது தேய்மானம் அடைந்திருந்தாலோ இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
வெகு சிலருக்கு இளம் வயதிலேயே இத்தகைய எலும்பின் வளர்ச்சியில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகும்.
இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையிலே உரிய மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டால் இதற்கென்று வரையறைப்படுத்தப்பட்டிருக்கும் பிரத்யேக இயன்முறை சிகிச்சையை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது நிவாரணம் கிடைக்கும்.
சில தருணங்களில் இவர்களுக்கு முதுகெலும்பு தளர்வு தொடர்பான பிரத்யேக இயன்முறை சிகிச்சையுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சையும் அவசியமாகும்.
வெகு சிலருக்கு தான் இத்தகைய பாதிப்பிற்கு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட நுண் துளை சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது.