காதில் குழாய் செயலிழப்பு ஏற்படும் பாதிப்பு சிகிச்சை
31 Jan,2025
பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கும், அதற்கு மேற்பட்ட வயதினரில் ஒரு சதவீதத்தினருக்கும் நடு காதில் பிரத்யேகமாக அமையப்பெற்றிருக்கும் யூஸ்டாச்சியன் குழாய் எனப்படும் பிரத்யேக குழாய் செயலிழப்பு ஏற்பட்டு, கேட்கும் திறனின் பாதிப்பு உண்டாகிறது. இதனை தற்போதைய மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களின் மூலம் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
காதில் நீர் நிரம்பிய போன்றதொரு உணர்வு , காது வலி, சிலருக்கு சில தருணங்களில் மட்டும் காது வலி , திடீரென்று வித்தியாசமான சப்தங்கள் கேட்கும் உணர்வு , தலைசுற்றல் , காதுகளில் வித்தியாசமான ஒலி கேட்பது , கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று காது,மூக்கு,தொண்டை, சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நடுக் காதில் உள்ள யூஸ்டாச்சியன் குழாய் சரியான விகிதத்தில் இயங்காமல் இருப்பதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் நடுக் காதில் அமையப்பெற்றுள்ள இத்தகைய குழாய் உங்கள் தொண்டையின் பின்புறத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய குழாய்கள் காற்று அழுத்தத்தை சமன் செய்து உங்களுடைய காதுகளிலிருந்து திரவத்தை வெளியேற்றுகிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அந்த குழாயில் செயலிழப்பு ஏற்படுகிறது. இதனால் உங்கள் குரலின் ஒலி மாற்றம் பெறுகிறது. இதன் காரணமாக காது வலி ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு காது பகுதிகளில் இயல்பான அளவைவிட கூடுதல் அழுத்தம் ஏற்படக்கூடும்.
ஒவ்வாமை, நெஞ்செரிச்சல், காய்ச்சல், வைரஸ் தொற்று ஆகிய பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு உரிய தருணத்தில் முறையான சிகிச்சையை பெறாவிட்டால் கேட்கும் திறன் முழுமையாக பாதிக்கப்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இத்தகைய அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து யூஸ்டாச்சியன் டியுபோபிளாஸ்ரி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் இதற்கான நிவாரணத்தை அளிக்கிறார்கள். இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு ஒரு வார கால அவகாசம் வரை வைத்தியர்கள் அறிவுறுத்தும் பரிந்துரையை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.