ஜெனிக் தலைவலி சிகிச்சை
28 Jan,2025
இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாளாந்தம் ஏதேனும் ஒரு வகையில் தலைவலியை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களும், கைபேசியை தொடர்ச்சியாக பாவிப்பவர்களும் தலைவலிக்கு அதிகமாக முகம் கொடுக்கிறார்கள். இந்தத் தருணத்தில் தலைவலிக்கு பல காரணங்கள் இருந்தாலும்.. கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காகவும் தலைவலி ஏற்படக்கூடும். இதற்கு மருத்துவ மொழியில் செர்வியோஜெனிக் ஹெட்டேக் என குறிப்பிடப்படுகிறது. இதற்கு பிரத்யேக சிகிச்சை முறைகள் உள்ளது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் நாளாந்தம் எம்மில் பலரும் கைபேசியில் பேசுவதும், கழுத்தை குனிந்து டிஜிட்டல் திரையை தொடர்ச்சியாக பார்ப்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனால் கழுத்துப் பகுதியை ஒரே பக்கமாக பாவிக்கும் போக்கு இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள நரம்புகளிலோ... அல்லது தசைகளிலோ மாற்றம் ஏற்பட்டு, அது தலைவலியாக உருவாகிறது. தலைவலி தலைவலியால் பாதிக்கப்படுபவர்களில் இருபது சதவீதத்தினர் அதாவது ஐந்தில் ஒருவர் இதுபோன்ற கழுத்து பகுதியில் ஏற்படும் அசௌகரியம் காரணமாகவே தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என வைத்தியர்கள் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் முப்பது வயதிலிருந்து நாற்பத்தைந்து வயதிற்குள் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு இத்தகைய பிரத்யேக தலைவலி பாதிப்பு ஏற்படுவது அதிகம் என்றும், மேலும் இத்தகைய பாதிப்பு கழுத்தின் ஒரு பக்கத்திலிருந்து ஏற்பட்டு, ஒற்றைத் தலைவலியாகவும் மாறக்கூடும் என்றும் விவரிக்கிறார்கள்.
இதற்கு வைத்தியர்கள் சில பிரத்யேக பரிசோதனையும் , மருத்துவ வரலாற்றையும் கேட்டு அறிந்த பிறகு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். அதன் பிறகு நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கிறார்கள். குறிப்பாக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாக இருந்தால் அதனை வலிமைப்படுத்துவதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் அங்கு ஏதேனும் நரம்புகளில் அழுத்தப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதனை நீக்குவதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் மருந்தியல் சிகிச்சையுடன் வலி நிவாரணி சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சையும் ஒருங்கிணைந்து வழங்கி இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.