நரம்பு வலி சிகிச்சை
14 Jan,2025
இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் மூட்டு வலி, தலைவலி, இடுப்பு வலி என ஏராளமான வலிகளை அனுபவித்திருப்போம். அதற்காக வைத்தியர்களிடம் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சையும் பெற்றிருப்போம்.
ஆனால் எம்மில் சிலருக்கு நரம்பு வலி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதனை பெரும்பாலானவர்கள் துல்லியமாக அவதானிக்காமல் சாதாரண வலி நிவாரணிகளை நிவாரணத்திற்காக பாவிக்கும்போது பாதிப்பு கூடுதலாகி விடுகிறது.
இதனால் வைத்தியர்கள் நரம்பு வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அதற்குரிய நவீன சிகிச்சை குறித்தும் நரம்பு வலி குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும் என விவரித்திருக்கிறார்கள்.
உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதால் உண்டாகும் வலி தான் நரம்பு வலி என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். உங்களுடைய உடலில் எங்கேயும் திடீரென்று மின்சாரம் தாக்குவது போல் சுருக்கென்று தாக்கினாலோ சிலருக்கு எரிச்சலுடன் கூடிய வலி ஏற்பட்டாலோ ஊசி போல் குத்துவது போன்ற வலி ஏற்பட்டாலோ தசைப் பிடிப்புடன் கூடிய வலி ஏற்பட்டாலோ உடலில் எங்கேனும் எறும்பு ஊர்வது போல் உணர்விற்கு பின் வலி உண்டாலோ அது நரம்பு வலி என அவதானிக்கலாம். மேலும் பெரும்பாலானவர்களுக்கு நரம்பு வலி இரவு நேரங்களில் தான் அதிக அளவில் ஏற்படுகிறது.
நரம்புகளில் ஏற்படும் அழுத்தம், நரம்பு பகுதியில் ஏற்படும் காயங்கள், சர்க்கரை நோய் மற்றும் தைரொய்ட் நோய் பாதிப்பின் காரணமாக முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்ளாத காரணத்தினாலும், நோய் தொற்று பாதிப்பின் காரணமாகவும் சிலருக்கு நரம்பு வலி ஏற்படக்கூடும்.
நரம்பு வலி ஏற்பட்டவர்களுக்கு சாதாரண வலி நிவாரண மருந்தியல் சிகிச்சை பலனளிக்காது. உங்களது வலியை வைத்தியர்களிடம் விவரித்து , அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொண்டு, அது நரம்பு வலி தான் என்பதனை உறுதிப்படுத்திய பிறகு அதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வைத்தியர்கள் வழங்குவார்கள்.
இந்த சிகிச்சையின் போது சிலருக்கு பிரத்யேக இயன்முறை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். இதற்குப் பிறகும் நரம்பு வலி பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் உங்களுடைய குருதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை மூலம் உங்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். இதன் மூலம் நரம்புகளில் உள்ள அழுத்தங்கள் நீக்கப்பட்டு வலி குறைக்கப்படுகிறது.