எம்மில் பலரும் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ எப்போதும் அமர்ந்து பணியாற்றும் நிலையில் இருந்து மாற்றம் அடைந்து அமர்ந்திருந்தாலோ அல்லது அவர்களுடைய முதுகு பகுதி இயல்பான அளவைவிட கூடுதலாக விறைப்புடன் இருந்தாலோ அவர்களுடைய முதுகெலும்பில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். இதனை மருத்துவ மொழியில் பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் என்றால் எம்முடைய முதுகெலும்பின் இன்டர்வெர்டெபிரல் டிஸ்க் எனப்படும் பகுதியில் உருவாகும் வீக்க பாதிப்பை குறிக்கும். இதனால் அப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, வலி உண்டாகும்.
இது எந்த வயதினரையும் பாதிக்கலாம். பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு எலும்பு மஜ்ஜையை பாதிக்கும் தொற்று பாதிப்பிலிருந்து உருவாகக் கூடும். இதனால் முதுகெலும்பை சுற்றியுள்ள திசுக்கள், மூட்டுகள் ஆகிய பகுதிகளிலும் எரிச்சலும், வீக்கமும் ஏற்பட்டு வலியை உண்டாக்கும்.
நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையில் மாற்றம் ,உங்களுடைய முதுகு பகுதியில் விறைப்பு தன்மை, நாளாந்த கடமைகளை மேற்கொள்வதில் பாரிய அசௌகரியம், அடிவயிற்று வலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளை இத்தகைய பாதிப்பு ஏற்படுத்தும். சிறுநீரகம், மலக்குடல், தொண்டை ஆகிய பகுதிகளில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் விவரிக்க இயலாத காரணங்களால் முதுகுத்தண்டு பகுதியில் தொற்று பாதிப்பை உண்டாக்கினால் அதனை பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் என குறிப்பிடுவார்கள்.
இத்தகைய அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிக்கு குருதி பரிசோதனை, எலும்பு பரிசோதனை, எக்ஸ்ரே , எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை, பஸ் கல்ச்சர் சென்சிட்டிவிட்டி ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்கள்.
இத்தகைய பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று பாதிப்பிற்கு காரணமான பாக்டீரியாவின் வகையை துல்லியமாக அவதானித்து, அதற்குரிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர். மேலும் இத்தகைய மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்ளும் போது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் கால அவகாசம் வரை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.
அலட்சியம் காரணமாக மருந்தியல் சிகிச்சையை புறக்கணித்தால் பாக்டீரியா தொற்று முன்பை விட விரைவாக வளர்ச்சி அடைந்து, பாதிப்பை மேலும் கடுமையானதாக ஆக்கிவிடும். இதனால் மருந்தியல் சிகிச்சையை முழுமையாக வைத்தியர்கள் பரிந்துரைத்த படி மேற்கொள்ள வேண்டும். மேலும் இதன் போது கட்டாய ஓய்வு, நாளாந்த நடவடிக்கையில் மாற்றம் ,பிரத்யேக அங்கியை அணிவது உள்ளிட்ட நிவாரண சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலருக்கு பாதிப்பின் தன்மையை பொறுத்து மூன்று மாதம் வரை சிகிச்சை நீடிக்கலாம்.