சாப்பாட்டுக்கு பிறகான ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பது எப்படி?
27 Dec,2024
எம்மில் பலரும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக விவரிக்க இயலாத பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறார்கள் .
குறிப்பாக இதயம், பார்வைத் திறன் , கால், சிறுநீரகம் என பல முக்கியமான உறுப்புகளில் பாரிய பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதே தருணத்தில் எம்மில் பலரும் தங்களது இரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையில் உணவிற்கு முன்- உணவிற்குப் பின் என இரண்டு வகையினதான பரிசோதனையை மேற்கொண்டு இருப்பார்கள்.
இதில் பலருக்கும் சாப்பாட்டிற்கு முன்னதான இரத்த சர்க்கரையின் அளவு சீராகவும் , சாப்பாட்டிற்கு பின்னரான ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட கூடுதலாகவும் இருக்கும்.
இதனை மருத்துவ மொழியில் சாப்பாட்டிற்கு பின்னரான இரத்த சர்க்கரையின் அதிகரித்த அளவு என குறிப்பிடுகிறார்கள். மேலும் இத்தகைய சாப்பாட்டிற்கு பின்னரான இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதுபோன்ற தருணங்களில் வைத்தியர்களின் அறிவுரைப்படி உணவு முறையுடன் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையையும் நோயாளிகள் தொடர வேண்டும். மேலும் இவர்களுக்கு இன்சுலின் எனும் ஹோர்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற தன்மை இருப்பதால் அதற்கான மருந்துகள் சிகிச்சையையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
பொதுவாக இது போன்ற சர்க்கரை நோயாளிகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ள பரிந்துரைக்கும் ஹெச்பிஏ1சி எனும் ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இவை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால்... சாப்பாட்டிற்கு பிறகு உயரும் ரத்த சர்க்கரையின் அளவு குறித்த அச்சத்தை தவிர்க்கலாம். பொதுவாக சாப்பாட்டிற்கு பிறகு உயரும் ரத்த சர்க்கரையின் அளவு மூன்று மணி தியாலத்திற்குப் பிறகு இயல்பான நிலையை அடையும்.
சிலர் இது இயல்பானது என நினைப்பர். அது தவறு. சாப்பாட்டிற்குப் பிறகு உங்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினால்.. இது தொடர்பான ஆலோசனையையும், சிகிச்சையையும் வைத்தியர்களிடம் பெற வேண்டும்.
அதனை பெற தவறினால்.. ரத்த நாளங்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு மடங்கு சாத்திய கூறு உண்டு என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதனால் ரத்த சர்க்கரையின் அளவை எப்போதும் சீரான அளவில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.