பொசிஷனல் வெர்டிகோ அரிய தலைச்சுற்றல் குரிய சிகிச்சை
18 Dec,2024
எம்மில் சிலருக்கு தலைசுற்றல் பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு ஐந்து வினாடிகள் முதல் பதினைந்து வினாடிகள் வரை கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் நிற்கும்போதோ.. நடக்கும் போதோ.. இத்தகைய பாதிப்பு ஏற்படுவதை அவதானித்திருப்போம்.
சிலருக்கு உறங்கும்போது உறக்கத்தில் பக்கவாட்டில் திரும்பி உறங்கும் போது 45 வினாடிகள் வரை நீடிக்கும் தலைசுற்றல் பாதிப்பு மிதமாகவோ.. தீவிரமாகவோ.. ஏற்படும்.
இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் பினைன் பராக்சிஸ்மல் பொசிஷன் வெர்டிகோ என குறிப்பிடுவர். இதற்கு தற்போது ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
சோர்வு , வாந்தி, குமட்டல், சமநிலையில் தடுமாற்றம், இரவு நேரத்தில் படுக்கையில் உறங்கும்போது வலது புறமாகவோ அல்லது இடம் புறமாகவோ புரண்டு படுக்கும் தருணத்தில் ஐந்து வினாடிகள் முதல் நாற்பத்தைந்து வினாடிகள் வரை தலை சுற்றல் பாதிப்போ அல்லது தலை சுற்றல் போன்றதோர் அசௌகரியமான உணர்வு ஏற்படும்.
இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து ஆலோசனையும் ,சிகிச்சையும் பெற வேண்டும். தவறினால் விவரிக்க இயலாத தலைவலி, காய்ச்சல், கேட்கும் திறன் பாதிப்பு , பேசுவதில் தடுமாற்றம், ஒருமுகமான கவனத்தில் பற்றாக்குறை, நடப்பதில் சிரமம் , பார்வையில் தடுமாற்றம்.. ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலக்ட்ரானிஸ்டாக்மோகிராபி அல்லது விடியோனிஸ்டாக்மோகிராபி பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கி நிவாரணத்தை அளிப்பர்.
வெகு சிலருக்கு மட்டுமே மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் தருவர்.