இன்றைய திகதியில் உலகம் முழுவதும் எண்பது கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாகவும், இதில் 40 கோடி பேர் இது குறித்த முறையான சிகிச்சையை பெறுவதில்லை என்றும், உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது.
சர்க்கரை நோயால் பாதம், கால், கண், இதயம், சிறுநீரகம்... ஆகிய முக்கிய உடல் உறுப்புகள் சேதமடைந்து பாதிக்கப்படுகிறது.
இதனை கண்டறிவதற்காக பல்வேறு நவீன பரிசோதனை முறைகள் அறிமுகமாகி இருப்பதாகவும், இதனை நோயாளிகள் பயன்படுத்திக் கொண்டு பாதிப்பினை தொடக்க நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சையை பெற வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் தங்களது ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவில்லை என்றால்... அதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அவர்களது பாதங்கள் தான். பாதங்களை முறையாக பரிசோதித்து சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மூன்று முதன்மையான பரிசோதனை முறைகள் அவசியம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில் முதலாவதாக டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை. இந்த பரிசோதனையின் மூலம் பாதங்களில் உங்களது குருதியோட்டம் எப்படி இருக்கிறது? என்பதனை துல்லியமாக அவதானிக்க இயலும். இரண்டாவது பரிசோதனை- பாதங்களில் இயங்கும் நரம்புகளின் செயல் திறன் குறித்த பயோதிசோமெட்ரி பரிசோதனை. இதன் மூலம் உங்களின் பாதங்களின் உணர்திறன் குறித்த துல்லியமாக அவதானிக்க இயலும்.
சிலருக்கு நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவர்களால் சூட்டை உணர இயலாது. இதனால் காலணி அணிந்தோ அல்லது காலணி அணியாமலோ இவர்கள் தரையில் நடக்கும் போது.. தரையில் இருக்கும் வெப்பத்தை உணர மாட்டார்கள். அதனால் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு, பாதிப்பு வீரியமாகும்.
இதனை இத்தகைய பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிக்கலாம். வேறு சிலர் குடும்ப உறுப்பினர்களுடன் துவி சக்கர வாகனத்தில் இறை வழிபாட்டிற்காக ஆலயத்திற்கு செல்லும் போது காலணி அணியாமல் செல்லக்கூடும்.
இந்தத் தருணத்தில் அவர்கள் ஞாபக மறதியாக துவி சக்கர வாகனத்தில் இருக்கும் சைலன்ஸர் எனும் பகுதி மீது பாதத்தை வைக்கும் சாத்தியம் உண்டு. சர்க்கரை நோயால் பாதம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இதன் வெப்பம் - சூடு தெரிவதில்லை. அதனால் பாதங்களில் புண்கள் ஏற்படக்கூடும்.
இத்தகையவர்களுக்கு மேற்கூறிய பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க இயலும்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக பாதங்களுக்கான அழுத்த பரிசோதனை. சர்க்கரை நோயால் பாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதத்தில் பல்வேறு இடங்களில் அழுத்தம் என்பது சமசீரற்றதாக இருக்கும்.
இத்தகைய பரிசோதனை மூலம் அதனையும் துல்லியமாக அவதானிக்க இயலும். இந்த மூன்று பரிசோதனைகளும் சர்க்கரை நோயால் பாதம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் அவர்களின் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அதற்குரிய மருந்தியல் சிகிச்சை - இயன்முறை சிகிச்சை - பிரத்யேக காலனி அணியும் முறை - நாளாந்தம் பாதங்களை பராமரிக்கும் முறை - உணவு கட்டுப்பாடு- உடற்பயிற்சி- நடை பயிற்சி - ஆகியவற்றை ஒருங்கிணைந்து சிகிச்சையாக வழங்கி, இந்த பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.அதே தருணத்தில் இவர்கள் ரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதும் முதன்மையானது.