எம்முடைய இல்லங்களில் வசிக்கும் மூத்த உறுப்பினர்கள் அல்லது முதியோர்கள் பேசும்போது அவர்களுடைய பேச்சில் தடுமாற்றமும், குரலில் மாற்றமும் இருப்பதை சிலர் அவதானித்திருப்பார்கள்.
இத்தகைய மாற்றத்திற்கு மருத்துவ மொழியில் பிரஸ்பைலரின்க்ஸ் என குறிப்பிடுவார்கள். இதனை உடனடியாக கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து அவர்களை எளிதாக மீட்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் பலரும் முதுமை வயதை எட்டினால் காது கேட்கும் திறன் மெல்ல குறைய தொடங்கும். பார்க்கும் திறனும் மெல்ல குறைய தொடங்கும்.
சிலருக்கு முதுமை வயதை எட்டியவுடன் அவர்களது பேச்சும், குரலின் திறனும் குறைய தொடங்கும்.
இந்த தருணத்தில் அவர்களுடைய குரல் நாண் மற்றும் குரல் வளையை ஒட்டிய தசைகள் ஆகியவற்றில் தளர்ச்சி ஏற்படுவதாலும், அவர்களுடைய மூச்சு விடும் திறனில் இயல்பான அளவைவிட குறைவாக இருப்பதாலும், வோக்கல் கார்ட்ஸ் எனப்படும் குரல் நாணில் தளர்ச்சி ஏற்பட்டு, அவர்களுடைய பேச்சு மற்றும் குரல் மாற்றம் பெறுகிறது.
மேலும் இவர்களால் உரத்த குரலில் பேசவோ யாரையேனும் உதவிக்கு அழைக்கவோ இயலாத நிலை ஏற்படும்.
முதுமையின் காரணமாக அவர்களுடைய நுரையீரலின் இயங்குத்திறன் குறைவடைவதாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
மேலும் சில முதியவர்களுக்கு வாய்ப்பகுதியில் செயற்கையான பற்களை பொருத்திக் கொண்டிருப்பார்கள்.
மேலும் சிலருக்கு மூக்குப்பகுதியில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு நாட்பட்ட பாதிப்பாக இருக்கக்கூடும்.
இத்தகைய கூடுதல் காரணங்களாலும் அவர்களுடைய பேச்சு மற்றும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புடன் வருபவர்களை வைத்தியர்கள் அவர்களுடைய மூக்கு, குரல் நாண் , நுரையீரல் இயங்கு திறன், இதயம் ஆகியவற்றை பரிசோதித்த பிறகு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதன் பிறகு அவர்களுக்கு ஸ்பீச் தெரபி எனும் சிகிச்சையை வழங்கி இதிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் அளிப்பார்கள்.
வெகு சிலருக்கு மட்டும் குரல் நாணில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சீரமைத்து, இதற்கு நிவாரணம் தருவார்கள்.