நீர்ச் சத்து குறைபாட்டின் காரணமாகவும் சிறுநீரக கல் உருவாகுமா....?
23 Oct,2024
இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் குளிர்சாதன வசதியுடன் கூடிய சூழலில் தான் பணியாற்றுகிறார்கள். அதிலும் இந்த தருணத்திற்குள் இந்த பணியை நிறைவு செய்து விட வேண்டும்.
என்ற நெருக்கடியில் பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் மன அழுத்தத்துடன் பணியாற்றும் போது, உடலுக்கு தேவையான நீரை பற்றி கவலை அடைவதில்லை.
தாகம் ஏற்பட்டாலும் அந்தத் தருணத்திலும் தண்ணீர் அருந்தாமல் தவிர்க்கிறார்கள். இதனால் இளம் தலைமுறையினருக்கு சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நாளாந்தம் நாம் பசியாறும் உணவில் எம்முடைய கண்களுக்கு புலப்படாத மைக்ரான் அளவிற்கான எளிதில் செரிமானம் ஆகாத உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் குடலுக்குள் சென்று விடும்.
இதனை நாம் போதுமான அளவிற்கு தண்ணீரை அருந்தினால் தான் அவை சிறுநீர் வழியாக சிறுநீரகம் வெளியேற்றும். தண்ணீரை அருந்தவில்லை என்றால் இத்தகைய சிறு சிறு உணவு துகள்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள், சிறுநீரகத்தில் தங்கி அவை கெட்டியான பொருட்களாக அதாவது கற்களாக மாறிவிடும்.
பொதுவாக ஐந்து மில்லி மீற்றருக்கும் குறைவான கற்களாக இருந்தால் அவை நீங்கள் அருந்தும் தண்ணீரின் உதவியால் சிறுநீர் வழியாகவே வெளியேறிவிடும்.
ஆனால் நீங்கள் போதுமான அளவிற்கு நாளாந்தம் குடிநீர் அருந்தவில்லை என்றால் சிறுநீரகம் வழியாக வெளியேற வேண்டிய சிறு சிறு கற்கள் அங்கேயே தேங்கி, ஐந்து மில்லி மீற்றருக்கும் அதிகமான கற்களாக உருவாகும். இவையே உங்களுக்கு வலியை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கும்.
பொதுவாக சிறுநீரக கல்லை அகற்ற வேண்டும் என்றால் 6 மில்லி மீற்றர் அளவைவிட பெரியதாக சிறுநீரக கல் இருந்தால் அந்தக் கல் சிறுநீர்ப் பாதை , சிறுநீரகம்.. என எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொருத்தும் , எத்தனை கற்கள் இருக்கின்றன? என்பதை பொருத்தும் சிகிச்சைகள் மாறுபடுகின்றன.
ஆறு மில்லி மீற்றரை விட பெரிதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தாலும் அதனை சத்திர சிகிச்சை மூலமாகத்தான் அகற்ற வேண்டியதிருக்கும்.
ஆறு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் ஒன்றிரண்டு கற்கள் இருந்தால் அதனை நீங்கள் போதுமான அளவிற்கு குடிநீரை அருந்தினால் அவை வெளியேறிவிடும்.
எனவே அலுவலக சூழலில் பணியாற்றினாலும் அல்லது விற்பனை நிலையங்களில் பணியாற்றினாலும் தாகம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவசியம் குடிநீரை அருந்த வேண்டும். இவை உங்களின் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக இயங்க வைக்கும் காரணி என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.