இன்றைய திகதியில் நாற்பது வயதை கடந்தவர்களுக்கு பல்வேறு காரணங்களால் அவர்களுடைய கை, கால், தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் நடுக்கம் ஏற்படுகிறது. இதற்கு தொடக்க நிலையிலே உரிய சிகிச்சை பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சிகிச்சை பெறாவிட்டால் இத்தகைய நடுக்கத்தின் வீரியம் அதிகரித்து விவரிக்க இயலாத துன்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
நடுக்கம் என்பது நோயல்ல. ஆனால் இது நோய்க்கான அறிகுறியாகும். எம்முடைய உடலில் பல பகுதிகள் சீரான தாள கதியில் இயங்கி வருகின்றன. இத்தகைய இயக்கத்தில் சிறிய அளவிலோ அல்லது பாரிய அளவிலோ தடைகள் ஏற்படும் போது நடுக்கம் உண்டாகிறது.
இத்தகைய பாதிப்பு குரல், கை, இரண்டு கைகள், தலை, கழுத்து, கால் ஆகிய பகுதிகளில் ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் நடுக்க பாதிப்பு ஏற்பட்டிருக்கும் உறுப்பினைப் பொறுத்து தாடை நடுக்கம், கழுத்து நடுக்கம், கை நடுக்கம், எலும்பு நடுக்கம் என வகைப்படுத்தி வைத்தியர்கள் குறிப்பிடுவார்கள்.
சிலருக்கு இத்தகைய நடுக்கம் மிதமானதாகவும், சிலருக்கு தீவிரமானதாகவும் ஏற்படக்கூடும். சிலருக்கு பசியின் காரணமாகவும் சிலருக்கு கட்டுப்படுத்த இயலாத கோபத்தின் காரணமாகவும் வேறு சிலருக்கு தாழ் நிலை இரத்த சர்க்கரையின் காரணமாகவும் நடுக்கங்கள் ஏற்படக்கூடும்.
மாணவ மாணவிகளை பொறுத்தவரை முக்கியமான தேர்வுகளை எழுதும் தருணத்திலோ அல்லது நேர்காணலை எதிர்கொள்ளும் தருணத்திலோ அவர்களையும் அறியாமல் நடுக்கம் ஏற்படக்கூடும்.
எம்மில் பலரும் நடுக்கம் என்றாலே அதனை பார்க்கின்சன் நோய் என அவதானித்துக் கொள்கிறார்கள். ஆனால் நடுக்கம் ஏற்பட்டால் நரம்பியல் மண்டல கோளாறுகள், பக்கவாதம், இதய பாதிப்பு, மது பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், குறிப்பிட்ட உறுப்புகளுக்கான நரம்புகள் சேதமடைதல் தைரொய்ட் சுரப்பியில் சம சீரற்ற தன்மை, கால்சிய சத்து பற்றாக்குறை, ரத்த சர்க்கரை அளவில் கட்டுப்பாடு இல்லாத நிலை என பல்வேறு காரணங்களாலும் இத்தகைய நடுக்கம் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனால் நடுக்கம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். குறிப்பாக நரம்பியல் செயல்பாட்டு திறன் பரிசோதனை, தைரொய்ட் பரிசோதனை, வளர்ச்சிதை மாற்ற பரிசோதனை, மருந்துகளின் பக்க விளைவு குறித்த பரிசோதனை என பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
சிலருக்கு இதனுடன் எழுத்து பயிற்சி, வரையும் பயிற்சி, கோப்பை தண்ணீரை கைகளால் பிடித்துக் கொள்ளும் பயிற்சி என பல்வேறு சோதனைகளையும் மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.
இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனைத் தொடர்ந்து ஓக்குபேசன் தெரபி என்னும் சிகிச்சையை மேற்கொண்டு நடுக்க பாதிப்பை குறைப்பதற்கான நிவாரண சிகிச்சையையும் மேற்கொள்வர்.
வெகு சிலருக்கு மட்டுமே டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் எனும் சத்திர சிகிச்சை மூலமாக முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.