கருவிழி மாற்று சத்திர சிகிச்சை....!
05 Oct,2024
எம்மில் சிலருக்கு பார்வை திறன் இழப்பு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது வலது கண் - இடது கண் என இரண்டு கண்ணில் ஏதேனும் ஒரு கண்ணில் வலி ஏற்பட்டாலோ அல்லது கண் சிவந்திருந்தாலோ அல்லது ஒளியை பார்க்கும்போது கண்கள் கூசினாலோ உங்களுடைய கண்களில் உள்ள விழித்திரை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, உடனடியாக கண் வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
விழித்திரை பாதிக்கப்பட்டிருந்தால் தற்போது கருவிழி மாற்று சத்திர சிகிச்சை மூலம் இவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிக்கும் போது எதிர்பாராத வகையில் கண்ணின் கருவிழி பாதிக்கப்படக் கூடும்.
வேறு சிலருக்கு எதிர்பாராமல் நிகழும் விபத்து அல்லது விழித்திரை வீக்கம், மரபணு குறைபாடு காரணமாக விழித்திரையில் பாதிப்பு , விழித்திரை இயல்பான அளவைவிட மெல்லியதாக மாற்றம் பெறுவது, விழித்திரையில் வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று, வடு, காயம் போன்றவை ஏற்படுவது, விழித்திரையில் புண்கள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் முழுமையான நிவாரணம் கிடைக்காத நிலை ஆகிய பல்வேறு காரணங்களால் பார்வை திறன் பாதிக்கப்படுபவர்களுக்கு கருவிழி மாற்று சத்திர சிகிச்சை முழுமையான நிவாரண சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது.
கருவிழி மாற்று சத்திர சிகிச்சை என்பது நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெறப்படும் விழித்திரையின் ஒரு பகுதியை விழித்திரை திசுக்களுடன் பொருத்தும் சத்திர சிகிச்சையாகும்.
விழித்திரை என்பது ஆரோக்கியமாக இருக்கும் போது தான் உங்களது கண்கள் தெளிவாக பார்க்கும் திறனை பெறும். பார்வையை மீட்டெடுக்கவும் , கண்களின் வலியை குறைக்கவும், சேதமடைந்த அல்லது சிதைந்த அல்லது நோயுற்ற விழித்திரையின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கும் இத்தகைய கருவிழி மாற்று சத்திர சிகிச்சை முழுமையான நிவாரணத்தை அளிக்கும்.
தற்போதைய நவீனப்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவ தொழில்நுட்பங்களால் நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெறப்படும் கரு விழியை எந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து, அங்கு மட்டும் கருவிழி மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டு பார்வையை வழங்க முடியும்.
இதன் காரணத்தினால் நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெறப்படும் ஆரோக்கியமான இரண்டு கண்கள் மூலம் நான்கு பேருக்கு நபருக்கு கரு விழி மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இயலும்.