சர்கோபீனியா எனும் தசை சிதைவு நவீன சிகிச்சை
24 Sep,2024
எம்மில் சிலருக்கு தொடர்ந்து மது அருந்துவதன் காரணமாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவர்களில் சிலருக்கு கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.
இதற்காக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறும் போது கல்லீரலில் இயல்பான அளவை விட கூடுதலாக பிரத்யேக திரவம் சேகரமாகி இருக்கும்.
இதனை வைத்தியர்கள் அகற்றுவதற்காக பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதன் போது வைத்தியர்கள் கல்லீரலில் இயல்பான அளவை விட கூடுதலாக சேகரமாகி இருக்கும் பிரத்யேக திரவத்தை வெளியேற்றுவார்கள்.
இந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் காரணமாக சிலருக்கு சர்கோபீனியா எனப்படும் தசை சிதைவு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனால் அவர்களின் உடலில் உள்ள தசைகளில் புரதச்சத்து குறைந்து, தசை பலவீனம் ஏற்பட்டு, எலும்பும் தோலுமாக காட்சியளிப்பர்.
இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டவுடன் அதற்குரிய முறையான சிகிச்சையை அவசியமாகவும், அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
சர்கோபீனியா பாதிப்பு என்பது தசைகளில் ஏற்படும் ஒரு வகையான பாதிப்பாகும்.
பெரும்பாலும் எழுபது வயதை கடந்த முதியவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது அதிகம். என்றாலும் கல்லீரலில் குறிப்பாக கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்பட்டு இதற்காக சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் சிலருக்கு பக்க விளைவின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலும் சிலருக்கு கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் வைத்தியர்களின் ஆலோசனையும், வழி காட்டலையும் உறுதியாகப் பின்பற்றாமல் மீறும் போது ஏற்படக்கூடும்.
இதனால் தசைகளின் வலிமை குறைந்து தசை பலவீனம் உண்டாகும். மேலும் இத்தகைய பாதிப்பின் காரணமாக நோயாளிகளுக்கு நிற்பதற்கோ நடப்பதற்கோ வலிமை இல்லாமல் அவர்கள் சக்கர நாற்காலி அல்லது படுக்கையில் படுத்தேயிருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
மேலும் இத்தகைய பாதிப்பினை துல்லியமாக அவதானித்து சிகிச்சை பெறாவிட்டால்... மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலையும் உண்டாக்கும்.
அதனால் கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது அதற்கான அறிகுறிகள் ஏதேனும் வெளிப்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும் முறையான மற்றும் முழுமையான சிகிச்சையையும் பெறவேண்டும் என வைத்து என் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.