...
சர்க்கரை நோயாளிகளில் பலருக்கும் அவர்களின் பாதங்களில் வலி, எரிச்சல் மற்றும் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுவதை நடைமுறையில் காண்கிறோம். இதற்கான காரணங்களை வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையின் அளவு காரணமாக நீரிழிவு நோய் ஏற்பட்டு, அவை பாதங்களில் உள்ள நரம்புகளை சேதமடைய செய்கிறது. குறிப்பாக கால், கெண்டைக்கால், கணுக்கால், பாதம் ஆகிய பகுதிகளில் உள்ள நரம்புகளை வெகுவாக சிதைக்கிறது. மேலும் ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட சற்று கூடுதலாக இருக்கும் சிலருக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். ரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் சமசீரற்ற தன்மையின் காரணமாகவே இத்தகைய பாதிப்பு உண்டாகுவதாக வைத்தியர்கள் விளக்குகிறார்கள்.
இத்தகைய, பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு பாத பகுதிகளில் எரிச்சல், ஊசியால் குத்துவது போன்ற வலி ஆகியவை ஏற்படும். இவர்கள் ரத்த சர்க்கரையின் அளவை எப்போதும் சீராக பராமரிப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மேலும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக காலுறை மற்றும் காலணியை அணிய வேண்டும்.
வயதானவர்களுக்கு அவர்களுடைய மூட்டு பகுதியில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டிருந்தால் இவர்கள் ஏற்கனவே சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் இவர்களுக்கும் பாதத்தில் வலி, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
இவர்கள் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே இயன் முறை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்வதன் மூலமும் முழுமையான நிவாரணத்தை பெறலாம். அதே தருணத்தில் சர்க்கரை நோயாளிகள் மூட்டு வலி பாதிப்பு இருந்தால் வைத்தியர்களின் பரிந்துரை இன்றி வலி நிவாரணி மருந்தியல் சிகிச்சையை மேற்கொள்ளக்கூடாது.
சர்க்கரை நோயாளிகளுக்கு தசை நார்களில் இறுக்கம் ஏற்பட்டாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களின் பாதங்களில் வலி, எரிச்சல் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இதன் காரணமாகவும் அவர்களுக்கு பாதங்களில் குறிப்பாக குதிகாலில் வலி, எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.
வேறு சிலருக்கு காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் குதிகால் வலி ஏற்படும். இவர்களும் தங்களது ரத்த சக்கரையின் அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் இயன்முறை சிகிச்சையை முழுமையாக கடைப்பிடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
கால் தசை பகுதிகளில் ஏற்படும் தளர்வு மற்றும் பலவீனம் காரணமாகவும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் வலி ஏற்படும். இதன்போது சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதுடன் வைத்தியரின் பரிந்துரையின்படி பிரத்யேக புரத சத்துள்ள உணவு மற்றும் தசை வலுவூட்டும் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாததால் அதன் காரணமாக கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக பாதங்களில் வலி, எரிச்சல் போன்றவை ஏற்படும். குறிப்பாக இத்தகைய பாதிப்பின் போது கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்களுக்கு ரத்த ஓட்டம் இயல்பான அளவைவிட மிகக் குறைவாக இயங்குவதால் கெண்டைக்கால் பகுதியில் வலி ஏற்படும்.
ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட தொலைவிற்கு சென்றவுடன் கெண்டைக்கால் பகுதியில் வலி ஏற்பட்டால் அவர்களுடைய கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டம் இல்லை என தெரிந்து கொள்ளலாம். இவர்களால் தொடர்ச்சியாக நடை பயிற்சி மேற்கொள்ள இயலாது.
இவர்களுக்கு கால் விரல்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும். இதனால் இவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நடைப்பயிற்சியின் போது கெண்டைக்கால் பகுதியில் தசைப்பிடிப்போ அல்லது வலியோ ஏற்பட்டால் உடனடியாக உங்களுடைய சர்க்கரை நோய் நிபுணரை சந்தித்து ஆலோசனையும் , சிகிச்சையும் பெற வேண்டும்.