அசாதாரணமான கண் துடிப்புக்கு சிகிச்சை
21 Jun,2024
எம்மில் சிலர் பேசிக் கொண்டிருக்கும்போது அல்லது நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களுடைய கண் இமைகள் இயல்பற்ற முறையில், அசாதாரணமாக துடிப்பதை நாம் கண்டிருப்போம். பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதனை உணர்ந்திருந்தாலும் சில தருணங்களில் இந்த அசௌகரியங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இதற்கான முழுமையான நிவாரண சிகிச்சை இருக்கிறது என்பதனை அவர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இத்தகைய அசாதாரணமான கண் துடிப்பு பாதிப்பிற்கு நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி இருக்கிறது என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக இத்தகைய அசாதாரணமான கண் துடிப்பு சிலருக்கு ஒரு கண்ணிலும், சிலருக்கு இரண்டு கண்ணிலும் ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் Blepharospasm என்றும், இமை தசை சுருக்கம் என்றும் குறிப்பிடுகிறார்கள். எம்முடைய கண்களை சுற்றி ஒரு வகையான தசை அமையப்பெற்றிருக்கிறது. இந்தத் தசையின் சீரான இயக்கத்தின் காரணமாக நாம் நினைத்த நேரத்தில் கண்களை மூடி, திறக்க இயலுகிறது. இந்த தசையின் இயக்கத்தில் ஏற்படும் சமச் சீரற்ற தன்மையின் காரணமாகத்தான் அசாதாரணமான கண் துடிப்பு பாதிப்பு உண்டாகிறது. இது இரண்டு வகையினதான காரணங்களால் ஏற்படுகிறது.
அசாதாரண கண் துடிப்பு சிலருக்கு தொடர்ச்சியாகவும், விட்டுவிட்டு ஒரு கண்ணில் மட்டும் ஏற்படக்கூடும். சிலருக்கு இவை கன்னம், காது ஆகிய பகுதிகளுக்கும் பரவக் கூடும். மேலும் அதிக வெளிச்சம் உள்ள பகுதிகளில் குறிப்பாக பகல் தருணங்களில் பயணிக்கும் போது கண் கூசும். சிலருக்கு கண்களில் வறட்டுத்தன்மையும் ஏற்படக்கூடும்.
எம்முடைய உடலில் கால்சிய சத்தின் அளவில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகும். சிலருக்கு உடலுக்கு தேவையான மெக்னீசியம் எனும் சத்தின் அளவு போதாமையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும். குருதியிலுள்ள பி ஹெச் (Ph)எனும் காரணியின் அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். வாந்தி, மன அழுத்தம், சில வகையான மருந்துகளின் பக்க விளைவு மற்றும் பாஸ்பரஸ் எனும் ரசாயனத்தின் அளவு கூடுதலாக இருக்கும் குளிர்பானங்களை தொடர்ச்சியாக அருந்துவதன் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்பட கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மருத்துவர்கள் கண் பரிசோதனை மற்றும் தசை இயக்க பரிசோதனை மற்றும் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு காரணத்தை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை வழங்குவர். நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை அளிப்பர். சிலருக்கு போடெக்ஸ் எனும் ஊசி வடிவிலான மருந்தை செலுத்தி நிவாரணத்தை தருவர். வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பிற்கான பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணமளிப்பர்.