கருப்பை ரத்தப்போக்கு சிகிச்சை
13 Jun,2024
இன்றைய சூழலில் எம்முடைய இளம் பெண்கள் பலரும் தங்களது உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற வேண்டிய மாதவிடாய் சுழற்சியில் சமச் சீரற்ற தன்மை ஏற்பட்டு, மாதவிடாய் சுழற்சியின் போது இயல்பான அளவை விட கூடுதலான ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாரிய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
மாதவிடாய் சுழற்சி உள்ள பெண்கள் மற்றும் பெண்மணிகளில் 14 முதல் 25 சதவீதத்தினர் வரை இத்தகைய அசாதாரணமான கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக பெண்கள் மற்றும் பெண்மணிகளிடத்தில் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும், இதற்கு தற்போது நவீன மருத்துவ சிகிச்சைகள் அறிமுகமாகி இருப்பதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அசாதாரணமான கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பு என்பது கருப்பையில் இருந்து இயல்புக்கு மீறி அல்லது நாட்பட்ட தருணத்திற்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதை குறிக்கிறது. இளம்பெண்கள் மற்றும் பெண்மணிகள் அனைவருக்கும் சரியான மற்றும் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதில்லை. எம்மில் பலருக்கு இதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வரம்பு எல்லையான 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரையிலான காலகட்டத்தில் சீரான மாதவிடாய் ஏற்படவில்லை என்றாலோ அல்லது அதி சீக்கிரமாக ஏற்பட்டாலோ அல்லது இதன் போது இயல்பான அளவைவிட கூடுதலாக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ உடனடியாக வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
குறிப்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்திருக்கும் மாதவிடாய் சுழற்சி அல்லது இரண்டு நாட்களுக்கு குறைவாக நீடிக்கும் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் நடைபெறும் காலகட்டத்தில் ஒரு மணி தியாலத்திற்குள் நாப்கினை அடிக்கடி மாற்றுதல், ரத்தப்போக்கு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.
ஹோர்மோன் சுரப்பில் ஏற்படும் சமச் சீரற்ற தன்மை காரணமாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். மேலும் சிலருக்கு மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, கருப்பையில் ஏற்படும் நார் திசு கட்டிகள், தைரொய்ட் மற்றும் சிறுநீரக தொற்று பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய அசாதாரணமான கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலே சொன்ன அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த தருணத்தில் ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, ஹிஸ்டிரோஸ்கோப்பி பரிசோதனை, திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைப்பர்.
இதன் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். முதலில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். எண்டோமெட்ரியல் அப்ளேசன் எனும் சிகிச்சை மூலமாகவும் இதற்கு நிவாரணம் வழங்குவர்.