நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு சிகிச்சை!
10 Jun,2024
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கை நடைமுறையை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இளம் வயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட கூடுதலாக இருந்தால் அவை உடல் முழுவதிலும் உள்ள நரம்புகளை காயப்படுத்தி, பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கால்கள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும். இதனை மருத்துவ மொழியில் டயபெட்டிக் நியூரோபதி என குறிப்பிடுகிறார்கள். இதற்கு உரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு , ரத்த சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்திக் கொண்டால்... ஆயுள் முழுதும் மகிழ்ச்சியாக வாழ இயலும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவில்லை என்றால்... அவை நரம்புகளை பாதிக்கும். சிலருக்கு கால்களில் எரிச்சல், ஊசி குத்துவது போல் உணர்வு, திடீரென்று மின் அதிர்வு ஏற்பட்டது போன்ற வலி, நடக்கும் போது பாதத்தில் உண்டாகும் விவரிக்க இயலாத வலி, நடையில் தடுமாற்றம், காலையில் படுக்கையில் இருந்து எழுந்து நின்றதும் தலைசுற்றல் மற்றும் நடையில் தடுமாற்றம்... என பல அறிகுறிகளை இவை ஏற்படுத்தும். இவை கால்களை மட்டுமல்லாமல் செரிமான மண்டலம், சிறுநீர்ப்பாதை, ரத்த நாளங்கள், இதயம் ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு இதன் வீரியம் அதிகரித்து உறுப்பு செயலிழப்பையும் உண்டாக்கக்கூடும்.
சர்க்கரை நோயின் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை சர்க்கரை நோயின் தீவிர நிலையாகும். பொதுவாக சர்க்கரை நோயாளிகளில் ஐம்பது சதவீதத்தினர் இத்தகைய தீவிர நிலைக்கு ஆளாகலாம். இதனால் வைத்தியர் பரிந்துரைக்கும் பிரத்யேக ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையையும், நரம்பியல் செயல்பாட்டு திறன் குறித்த பரிசோதனையும் மேற்கொண்டு, பாதிப்பின் தீவிரத்தை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
ரத்த சக்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம், பாரம்பரியமாக நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், உடற்பருமன், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இத்தகைய டயாபட்டிக் நியூரோபதி பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் இவர்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இவர்களுக்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். மேலும் மருந்தியல் சிகிச்சைகளுடன் பிரத்யேக இயன்முறை சிகிச்சையையும் உறுதியாக நாளாந்தம் மேற்கொண்டால்.. பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற இயலும்.