புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?
19 May,2024
இன்றைய சூழலில் உலகளவில் பெண்மணிகளுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது சதவீத அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முன் ஒவ்வொரு பெண்மணிகளும் மம்மோகிராம் எனும் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைப்பர். மேலும் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் நோயாளிகள் வைத்தியர்களிடம், 'இது எங்கள் குடும்பத்தில் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கும் ஏற்படவில்லை. எமக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது?' என்ற வினாவை முன் வைப்பர். இதற்காகத்தான் மருத்துவர்கள் தற்போது மார்பக புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கும், இதன் தொடக்க நிலை அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் மரபணு பரிசோதனை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.
மேலும் இத்தகைய மரபணு பரிசோதனையை யார் மேற்கொள்ள வேண்டும் என்றும் வைத்திய நிபுணர்கள் விவரித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்மணிகளுக்கு பரிசோதனையின் போது மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டிருப்பவர்கள்... அதேபோல் மம்மோகிராம் பரிசோதனையில் டிரிபிள் நெகட்டிவ் கேன்சர் செல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டிருப்பவர்கள்... ஒரே தருணத்தில் இரண்டு மார்பக பகுதிகளிலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டவர்கள்.. ஒரே மார்பகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டிருப்பவர்கள்.. மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டிருக்கும் ஆண்கள்.. குடும்ப உறுப்பினர்களின் மார்பக புற்றுநோய் அல்லாது வேறு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டிருப்பவர்கள் என இவர்கள் அனைவரும் மரபணு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இத்தகைய மரபணு பரிசோதனையின் மூலம் எதிர்காலத்தில் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்க இயலும் என்றும், மேலும் மார்பக புற்று நோயின் பாதிப்பு ஏற்பட்டவுடன் தொடக்க நிலையில் கண்டறிந்து ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை பெற இயலும் என்றும் வைத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.