இன்று சர்வதேச உயர் ரத்த அழுத்த தினம் என்பதால், மனித குலம் ஆரோக்கியமாக வாழ அதுகுறித்த விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டியது அவசியமாக உள்ளது.
'ஹைப்பர் டென்ஷன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் 'சைலன்ட் கில்லர்' என குறிப்பிடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இது உலக அளவில் ஒரு பெரும் சுகாதார எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. ஏனெனில் உலக அளவில் அகால மரணத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. ஆண்டுதோறும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மே 17ம் தேதி சர்வதேச உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மருத்துவ பரிசோதனை
ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ, ஒவ்வொருவரும் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கு, வாழ்வியல் முறைகள் வழியாக எவ்வாறு அதனை குறைத்துக் கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
வாழ்க்கை முறை, மன அழுத்தம், வயது மற்றும் பரம்பரை காரணிகள் போன்ற பல்வேறு காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நிர்வகிக்க வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் அவசியம். உயர் ரத்த அழுத்தம் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. இது இதய நோய், பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள், பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு வழிகோலுகிறது.
உலக உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு
எனவே இதிலிருந்து தவிர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பொதுவான சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். உப்பு, கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக சேர்த்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். உடல் செயல்பாடு இல்லாதிருப்பது, அதிக ஆல்கஹால் எடுத்துக்கொள்வது போன்றவையும் இந்நோயை கொண்டு வந்து சேர்க்கும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது முக்கியம். சுறுசுறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் என வாரம்தோறும் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உயர் ரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கும்.
பழங்கள், காய்கறி
புகை, மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் யோகா, தியானப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வழக்கமான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து உரிய வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும்.
இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றி, உலக மக்கள் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதே மருத்துவர்கள் இன்றைய தினம் தரும் முக்கிய அறிவுரைகளாகும்.