கொரோனா பாதிப்பு கண்டு மீண்டவர்களை அலைக்கழிக்கும் நாள்பட்ட சோர்வு, புதிய அலையாக உலக மக்களை அதிகம் பாதித்து வருகிறது. இதன் மத்தியில் ‘நாள்பட்ட சோர்வு நோய்க்குறி’ பொருட்டான விழிப்புணர்வு தினமாக மே 12 அனுசரிக்கப்படுகிறது.
ஒருவரை நாள்தோறும் சோர்வு அழுத்துவது, அதுவும் நாள்கணக்கில் தொடர்கிறது எனில், அவர் நாள்பட்ட சோர்வு நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது அந்த நபரின் பணித்திறன் முதல் உளவியல் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நாள்பட்ட சோர்வு நோய்க்குறி கண்டவர்கள் தொடர் சோர்வு மட்டுமன்றி, தூக்கத்தின் சாயல், மந்த உந்துதல் மற்றும் குறைவான விழிப்புணர்வை உணர்வார்கள்.
கொரோனா பாதிப்பு கண்டு மீண்டவர்கள் மத்தியில், அதன் பக்கவிளைவாக பல்வேறு உடல்நல பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக, நாள்பட்ட சோர்வு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கொரோனா வைரஸ் பாதித்தது மற்றும் சாத்தியமான நரம்பியல் விளைவுகள் ஆகியவை காரணமாக இந்த நாள்பட்ட சோர்வு எழுந்திருக்கலாம். கொரோனா பக்கவிளைவாக அல்லாதும் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி மக்களை படுத்தி வந்த போதிலும், கொரோனாவுக்கு பின்னரே இதன் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த நாள்பட்ட சோர்வு நோய்க்குறியை எதிர்த்துப் போராட, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது, சீரான உணவு, போதிய உடற்பயிற்சி மற்றும் உறக்கம் ஆகியவற்றுடன் மன அழுத்தத்தை முறையாக நிர்வகித்தல் போன்றவை அவசியமாகின்றன. இதற்கு நாள்பட்ட சோர்வு நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி, அவர்களது குடும்பத்தினர் உதவியும் அவசியப்படும். பொதுவெளியில் அதிகம் அறியப்படாத மற்றும் அலட்சியத்துக்கு ஆளாக்கப்படும் இந்த நிலையைப் பற்றிய விழிப்புணர்வை கூட்டவே மே 12 அன்று நாள்பட்ட சோர்வு நோய்க்குறி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நாள்பட்ட சோர்வு நோய்க்குறி கண்டவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகள், பணி மற்றும் சமூக தொடர்புகளில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இவை அவர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கவும் செய்யும். தீராத சோர்வு அல்லது அப்படி உணரப்படுவதே நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் முக்கிய அறிகுறியாகும். தொடர்ச்சியான மற்றும் விவரிக்க முடியாத சோர்வு ஆகியவற்றால் எழும் பலவீனமான நிலை, சற்று ஓய்வெடுத்தாலும் தணியாத போக்கு ஆகியவையும் தென்படும். இந்த சோர்வு அறிவாற்றல் செயலிழப்புடன் சேரும் போது பாதிப்பு அதிகமாகிறது. அதிலும் நாள்பட்ட சோர்வின் காலஅளவு மாதக்கணக்கில் நீளும்போது மருத்துவ கவனிப்பும் அவசியமாகக் கூடும்.
நாள்பட்ட சோர்வு நோய்க்குறி கண்டவர்களை, பிறரை விட கூடுதல் நேரம் தூங்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக ஆழ்ந்த சோர்வு, உடல் உழைப்புக்குப் பிந்தைய உடல்நலக்குறைவு, தூங்கி எழுந்த பின்னரும் புத்துணர்ச்சி கிட்டாதது, மூளையை மூடுபனி போர்த்தியது போன்ற அறிவாற்றல் தடுமாற்றங்கள் ஆகியவை இந்த நாள்பட்ட சோர்வு நோய்க்குறி கண்டவர்களை அதிகம் அலைக்கழிக்கும்.
கொரோனா போன்ற வைரஸ் தொற்றுகளால் எழுந்த நோயெதிர்ப்பு செயலிழப்பு மட்டுமன்றி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உளவியல் சார்ந்த மனஅழுத்தம் உள்ளிட்ட காரணிகளாலும் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி எழக்கூடும். இந்த பாதிப்பு கண்டவர்கள், அதிக உழைப்பைத் தவிர்த்து, வேலை - ஓய்வு இடையே சமநிலையை பராமரிக்க முயல வேண்டும். சீரான உறக்கத்தையும் பராமரிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் மட்டத்துக்கு ஆதரவளிக்கும் சத்தான மற்றும் சமநிலையான உணவை உண்ண வேண்டும். யோகா, நடைபயிற்சி போன்ற மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பாதிப்பு அதிகமிருப்பின் மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொண்டால் விரைவில் இயல்புக்கு திரும்பலாம். ஆனால் மருத்துவப் பரிந்துரையின்றி மருந்துகளை எடுத்துகொள்வது அறவே கூடாது.