நாம் சில நபரை சந்திக்கும் போது அவர் அவருடைய இருக்கையில் சௌகரியமாக அமர்ந்திருப்பதுடன், கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார். அது தவறு என்று அவருக்குத் தெரிந்திருந்தாலும் அதனை நிறுத்த இயலாது.
ஏனெனில் அவருடைய பழக்க வழக்கங்கள் ஒன்றாக கால் ஆட்டுதல் மாறி இருக்கும். இதுகுறித்து மருத்துவர்கள் விளக்கம் அளிக்கும்போது, இதனை மருத்துவ மொழியில் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என குறிப்பிடுவார்கள்.
இதற்கு நரம்பியல் சிகிச்சை வைத்தியரிடம் முறையாக சிகிச்சை பெற்றால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிலர் மாலை வேலைகளில் ஓய்வு எடுக்கும் போது இத்தகைய அனிச்சையான கால் அசைவினை மேற்கொள்வர். இது நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய பாதிப்பாகும். சிலருக்கு கால்கள் மட்டுமல்லாமல் கை, மார்பு, முகம் என சில உறுப்புகளிலும் இத்தகைய அனிச்சையான அசைவு ஏற்படும்.
இது இரவு நேரத்தில் உறக்கத்தின் போது நிகழ்ந்து, உறக்கத்தை கெடுத்து மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால் இத்தகைய பாதிப்பிற்கு முறையாக சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கால் பகுதிகளில் வலியுடன் கூடிய தசை பிடிப்பு, அரிப்பு, ஊர்ந்து செல்தல் போன்ற கூச்ச உணர்வு, எரிச்சல், வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதில் அசௌகரியம், உறக்கத்தின் போது உடல் உறுப்புகளை தன்னிச்சையாக அசைத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இரும்புச் சத்து குறைபாடு, மூளையில் டோபமைன் எனும் நரம்பு மற்றும் தசைகளை கட்டுப்படுத்தும் சுரப்பியின் செயல்பாட்டில் உண்டாகும் சமசீரற்ற தன்மை, கட்டுப்படுத்த இயலாத நீரிழிவு, குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவு, மதுப்பழக்கம், உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
அதனால் இத்தகைய நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, உறக்கம் தொடர்பான பிரத்யேக பரிசோதனை, உறக்கத்தின் போது உடல் உறுப்பின் தன்னிச்சையான அசைவு குறித்த ஆய்வு, பாலிசோம்னோகிராம் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
இதன் முடிவுகளின் அடிப்படையில் கால்களில் ஏற்படும் தன்னிச்சையான அசைவுகளை கட்டுப்படுத்துவதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முதன்மையாக நிவாரணம் அளிப்பர். டோபமைன் எனும் வேதிப்பொருளின் சுரப்பு தன்மையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதனை சீராக்குவதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்குவர். இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கான மருந்தியல் சிகிச்சையும், தசைகளை தளர்த்துவதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளையும் வழங்கி இதற்கு நிவாரணம் தருவர். அத்துடன் சிகிச்சைக்குப் பிறகு கோப்பி அருந்துவதை தவிர்க்குமாறும், மாலை நேரத்தில் கடும் உழைப்பை தவிர்க்குமாறும் வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள். இதனையும் உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.