தற்போதைய கோடை காலத்தில் தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துகிறோம். வைத்தியர்கள் தாகம் எடுக்கவில்லை என்றாலும் கோடை வெப்பத்தை எம்முடைய உடல் எதிர்கொள்ள போதுமான அளவு திரவ ஆகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
இந்நிலையில் எம்மில் சிலருக்கு வாய் உலர்ந்து போகும். இதன் போது எம்முடைய வாய்ப்பகுதியை எப்போதும் போதுமான அளவு ஈரப்பதத்துடன் இருப்பதற்கு உமிழ்நீர் சுரப்பிகள் சீராக இயங்கும்.
சிலருக்கு இந்த உமிழ்நீர் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு உமிழ்நீர் சுரப்பி சமச்சீரற்ற தன்மையில் இயங்கினால் அவர்களுடைய வாய்ப்பகுதி உலர்ந்து போகும்.
இதனை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். பெற தவறினால் வாய்ப்பகுதியில் உள்ள பற்கள், ஈறுகள், நாக்கு போன்றவை பாதிக்கப்படும். அத்துடன் உணவை மெல்லவோ விழுங்கவோ இயலாமல் கடும் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடும்.
சிலர் பதற்றமாக இருந்தாலும் அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலும் வாய்ப்பகுதி உலர்ந்து போவதை உணர முடியும். சிலருக்கு முதுமையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். வாய் உலர்ந்து போனால் பேசுவதிலும், திரவ மற்றும் திட ஆகாரங்களை உட்கொள்வதிலும் பாரிய பின்னடைவு ஏற்படும். மேலும் பற்சிதைவு, வாய்ப்புண் போன்ற தொற்று அபாயமும் அதிகரிக்கும்.
அடிக்கடி தாகம் ஏற்படுவது, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பது, சுவை உணரும் திறன் குறைந்திருப்பது, தொண்டையில் புண் ஏற்பட்டிருப்பது, வாய் துர்நாற்றம் மற்றும் சுவாசத்தில் துர்நாற்றம் உண்டாவது, வாயில் அடிக்கடி புண்கள் ஏற்படுவது, செயற்கையான பற்களை அணிவதில் பல அசௌகரியங்கள் உருவாவது, நாக்கு தடித்திருப்பது, உமிழ்நீர் போதிய அளவில் சுரக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வாய் உலர்ந்து போகும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிந்து கொள்ளலாம்.
நீர்ச்சத்து குறைபாடு, ,சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு போன்ற பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு , இரவில் உறக்கத்தின் போது வாய் வழியாக மூச்சு விடுவது, குறட்டை, மூக்கில் சதை வளர்ச்சி, ஒவ்வாமை, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டிருப்பது, புகைபிடித்தல், போதை பொருள் பாவனை போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய வாய் உலர்ந்து போகும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதற்கு உமிழ்நீர் சுரக்கும் சுரப்பியின் செயல்பாட்டை அளவிடுவதற்கான பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, குருதி பரிசோதனை, திசு பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.
வெகு சிலருக்கு மட்டுமே உமிழ்நீர் சுரக்கும் சுரப்பியில் அதன் செயல்பாட்டை சீராக்கவும், மேம்படுத்தவும் சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர். இத்தகைய சிகிச்சைகளுக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றினால் இந்த பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.