கை நடுக்கம் பாதிப்பு நவீன சிகிச்சை
08 Apr,2024
எம்மில் நாற்பது வயதை கடந்த பலருக்கும் அவர்களுடைய கை, கால், விரல்கள், மணிக்கட்டு, தலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் அவை தன்னிச்சையாக இயங்கத் தொடங்கி நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய பாதிப்பிற்கு உரிய தருணத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கை நடுக்கம் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை குறிக்கும் நோயாகும். இதன்போது எம்முடைய கை மற்றும் விரல்களில் உள்ள நரம்புகள் தன்னிச்சையாக இயங்கத் தொடங்கி, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடலின் எந்த பகுதியையும் பாதிக்கக்கூடும். இருப்பினும் பெரும்பாலும் இவை கைகளில் அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் கைகளை பயன்படுத்தி நாம் மேற்கொள்ளும் நாளாந்த கடமைகளில் பாரிய பின்னடைவு ஏற்படுகிறது.
இது தீவிரமான ஆபத்து நிலை இல்லை என்றாலும் கவனிக்காது புறக்கணித்தால், காலப்போக்கில் மோசமடைந்து பாதிப்பை கடுமையானதாக்கலாம். வேறு சிலருக்கு பார்க்கின்சன் எனும் நோயை தூண்டும் காரணியாகவும் அமைந்து விடக்கூடும். இவை பெரும்பாலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படுகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
முதலில் ஒரு கையில் உள்ள விரல்களில் லேசான நடுக்கம் ஏற்படும். பிறகு ஒரு கை அல்லது இரண்டு கைகளையும் பாதிக்கும். சிலருக்கு தலைப்பகுதியில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு தன்னிச்சையாக தலை ஆடத் தொடங்கும். இதன் போது மன அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு சோர்வும், உடல் வெப்பநிலையும் சமச்சீரற்றதாக ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். மேலும் இது கை நடுக்கம் பாதிப்பா? அல்லது பார்க்கின்சன் நோயின் அறிகுறியா? என்பதனை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
இதன்போது மருத்துவர்கள் முதன்மையாக உங்களுடைய நரம்பியல் செயல்பாட்டின் திறன் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இதனுடன் தைரொய்ட் பரிசோதனை, வளர்ச்சிதை மாற்ற பரிசோதனை, மருந்துகளின் பக்க விளைவு ஏற்படுகிறதா? என்பதனை அறிந்துகொள்ள பிரத்யேக பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். சிலருக்கு ஒரு கோப்பையில் தண்ணீரை அருந்தும் பரிசோதனை, எழுத்து பரிசோதனை, வரையும் பரிசோதனை போன்றவற்றையும் மேற்கொண்டு பாதிப்பின் வீரியத்தை அளவிடுவர்.
இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். போடெக்ஸ் எனும் ஊசி மருந்து மூலமும் நிவாரணம் வழங்குவர். சிலருக்கு பிரத்யேக கருவிகளின் மூலம் நரம்பு தூண்டல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர். இத்தகைய சிகிச்சைகளின் மூலம் பலன் இல்லாதவர்களுக்கு மட்டுமே வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு, டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் எனப்படும் சத்திர சிகிச்சையை மேற்கொள்வர்.