இதய திசுக்களில் ஏற்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை
04 Mar,2024
எம்மில் சிலருக்கு மார்பு பகுதியில் வலி ஏற்படும். உடனே மாரடைப்பு என்று நினைத்து அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவர். மருத்துவர்கள் நோயாளியை பரிசோதித்து அவருக்கு பெரிகார்டிடிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பர். இதற்கு தற்போது நவீன மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய இதயத்தின் மேற்பகுதியில் இரட்டை அடுக்குடன் கூடிய மெல்லிய திசுக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. இதனை பெரிகார்டியம் என்பர். இந்த திசு பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது பிரத்யேக திரவங்கள் இயல்பான அளவை விட கூடுதலாக தேக்கமடைந்தாலோ வலி உண்டாகக்கூடும். இதனைத் தான் மருத்துவ மொழியில் பெரிகார்டிடிஸ் என குறிப்பிடுகிறார்கள். ஆண், பெண் என இரு பாலினத்தவர்களுக்கும் 16 வயது முதல் 65 வரை உள்ளவர்களுக்கு இத்தகைய பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதன் போது மார்பில் வலி உண்டாகி அது இடது தோள்பட்டை வரை பரவும். சிலருக்கு வறட்டு இருமல், பதற்றம், சோர்வு, முதுகு, கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் வலி, உறங்கி இருக்கும் போது திடீரென்று ஏற்படும் மூச்சு திணறல், சுவாசக் கோளாறு சிக்கல்கள், வயிற்றில் ஏற்படும் வீக்கம், கால் மற்றும் பாதங்களில் ஏற்படும் வீக்கம், லயமற்ற அல்லது சீரற்ற இதயத்துடிப்பு... ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய் தொற்றுகள், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, காச நோய், இதயத்தில் வேறு ஏதேனும் சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்தால்... அதற்கான பக்க விளைவு ..என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன் பாதிப்பு நான்கு வகையினதாக ஏற்படக்கூடும். இதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். இதன்போது மருத்துவர்கள் எக்ஸ்ரே, எலக்ட்ரோகார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பர்.
இதனைத் தொடர்ந்து பிரத்யேக வலி நிவாரணி மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குபவர். சிலருக்கு ஸ்டீராய்ட் மருந்துகளை வழங்கியும் நிவாரணம் அளிப்பர். வெகு சிலருக்கு மட்டுமே இதயத்தின் மேற்பரப்பில் இருக்கும் அந்த திசுக்களின் ஊடாக இருக்கும் திரவத்தையும், அதனுடாக உருவாகும் அழுத்தத்தையும் அகற்றும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணத்தை வழங்குவர். இத்தகைய சிகிச்சைகளை பெற்ற பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றினால்... மீண்டும் இத்தகைய பாதிப்பை ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.