பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பில் பதினைந்து சதவீதம் மென்திசு சர்கோமா (Soft Tissue Sarcoma) எனும் புற்றுநோய் பாதிப்பு என்றும், இத்தகைய பாதிப்பை 59 சதவீதத்தினர் மட்டுமே தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்று முழுமையான நிவாரணம் பெறுகிறார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் புற்றுநோயின் ஒரு வகையினதான இத்தகைய மென் திசு சர்கோமா பாதிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மென்மையான திசுக்களில் உண்டாகும் சர்கோமா எனும் புற்றுநோய் பாதிப்பு அரிய வகையான புற்றுநோய் பாதிப்பாகும். இது உடலிலுள்ள இணைப்பு திசுகளை பாதிக்கும் தன்மை வாய்ந்தது. உடலின் மென்மையான திசுவிலுள்ள செல்கள் வளர்ச்சியடையும்போது இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் மென்மையான திசுக்களில் தசை, தசை நாண்கள், கொழுப்பு, இரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவை அடங்கியிருக்கிறது.
இத்தகைய புற்றுநோய் பாதிப்பு உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். குறிப்பாக கை, கால், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உண்டாகலாம். இத்தகைய மென் திசு புற்றுநோய் ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகளாக உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். இதில் சில வகையான புற்றுநோய் குழந்தைகளை பாதிக்கும். இதனைத் தொடக்க நிலையில் கண்டறிவது கடினம் என்பதையும், இதற்கான பிரத்யேக அறிகுறிகள் வெளிப்படுவது குறைவு என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
சிலருக்கு உடலின் பகுதியில் கட்டிகள் உருவாகக்கூடும். இந்த கட்டிகள் வீக்கமடைந்து வலியை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு வயிற்றின் உட்பகுதியில் ஏற்பட்டாலோ அல்லது நுரையீரல் பகுதியில் ஏற்பட்டாலோ சுவாசிப்பதில் சிரமம், வயிற்று வலி போன்றவற்றை உணரலாம். சிலருக்கு இரத்த வாந்தி, காய்ச்சல், பசியின்மை, சோர்வு போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
மரபணு குறைபாடு, கீமோதெரபி சிகிச்சையின் பக்கவிளைவு, பூச்சிக்கொல்லி மருந்துகளை பாவிப்பதால் ஏற்படும் பக்கவிளைவு... இவற்றின் காரணமாக இத்தகைய மென்திசு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
சிடி ஸ்கேன் பரிசோதனை, பெட் ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை போன்றவற்றின் மூலம் பாதிப்பின் தன்மையைத் துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ப சிகிச்சையை தீர்மானிப்பர். இதன்போது சத்திர சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, டார்கெடட் தெரபி போன்ற சிகிச்சைகளின் மூலமாக முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.