நெஃப்ரோபிளாஸ்டோமா எனும் சிறுநீரக பாதிப்பு
05 Feb,2024
பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களைத் தாக்கும் நான்காவது புற்றுநோய் கட்டி பாதிப்பு என நெஃப்ரோபிளாஸ்டோமா என்ற சிறுநீரத்தில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை மருத்துவர்கள் பட்டியலிடுகிறார்கள். இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம் எனவும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஐந்து வயதிற்குள்ளான சிறார்களையும், சிறுமிகளையும் தாக்கும் இந்த அரிய வகையினதான புற்றுநோய் கட்டியை மருத்துவ துறையினர் வில்ம்ஸ் கட்டி என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இத்தகைய பாதிப்பு குழந்தைகளை மட்டுமில்லாமல் எந்த வயதினரையும் தாக்கக்கூடும் என்றும், இத்தகைய கட்டி பெரும்பாலும் பிள்ளைகளின் ஒரு சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படுகிறது என்றும், மிகமிக அரிதாகவே இரண்டு சிறுநீரகங்களிலும் ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வயிற்கு பகுதியில் வலி குறிப்பாக வயிற்றின் மேல் பகுதியில் வீக்கத்துடன் கூடிய வலி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், காய்ச்சல், இரத்தசோகை, உயர் குருதி அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களைச் சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். இதன் போது சிறுநீர் பரிசோதனை, இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை செய்து, கட்டி பாதிப்பின் நிலையையும், தன்மையையும் துல்லியமாக அவதானிக்கவேண்டும்.
இத்தகைய பாதிப்பு ஐந்து நிலைகளைக் கொண்டிருக்கிறது மற்றும் எத்தனை சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவதானித்து இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள். சத்திர சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேசன் சிகிச்சை ஆகியவற்றை பிரத்யேகமாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ வழங்கி நிவாரணம் அளிக்கிறார்கள். மேலும் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது சிறுநீரகத்தின் பகுதியளவு நீக்க சத்திர சிகிச்சை, இரண்டு சிறுநீரகங்களிலும் பகுதியளவு நீக்க சத்திர சிகிச்சை சிலருக்கு அவசியப்படலாம். வேறு சிலருக்கு பகுதியளவு சிறுநீரக நீக்க சத்திர சிகிச்சையுடன் அப்பகுதியிலுள்ள திசுக்களையும் அகற்றும் சத்திர சிகிச்சையும் அவசியப்படலாம். சத்திர சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் நோயாளிகள் ஒராண்டு வரை இருக்கவேண்டும் என்பதையும், அவர்கள் பரிந்துரைக்கும் அறிவுரையை முழுமையாக பின்பற்றவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.