இன்றைய திகதியில் எம்முடைய தெற்காசிய நாடுகள் முழுவதிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருகிறது.
மக்களும் இது குறித்த முறையான விழிப்புணர்வைப் பெற்றிருந்தாலும், தங்களின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த மாத்திரைகளை நாளாந்தம் எடுத்துக்கொள்கிறார்கள்.
மாத்திரைகளைத் தான் எடுத்துக்கொள்கிறோமே..! என நினைத்து விரும்பிய உணவுகளை சுவைக்கத் தொடங்குகிறார்கள்.
இதனால் நாளடைவில் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த சற்று கூடுதலான எண்ணிக்கையில் சற்று வீரியமிக்க மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதனால் அவர்களது சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
நீங்கள் உங்களுடைய உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள் பக்கவிளைவை ஏற்படுத்தி, உங்களின் சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். இதற்கு மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெற்றால், இத்தகைய பாதிப்பை ஏற்படாமல் தடுத்து நிறுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் மட்டுமில்லாமல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குள்ளாகும் நோயாளிகள் மற்றும் ஏனைய வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பக்க விளைவின் காரணமாக அறுபது சதவீத நோயாளிகள் தொடக்க நிலை, இரண்டாம் கட்ட நிலை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கு மருத்துவ மொழியில் டிரக் இன்டீயூஸ்ட் நெஃப்ரோபதி என குறிப்பிடுவார்கள்.
இத்தகைய பாதிப்பிற்கு சிகிச்சையளித்து முழுமையாக நிவாரணம் அளிக்க இயலும். எனினும் இத்தகைய பாதிப்பை ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சர்க்கரை நோய், உயர் குருதி அழுத்த பாதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சுய மருத்துவம் மேற்கொள்பவர்கள், வலி நிவாரணிகளை மருத்துவர்களின் அறிவுரையின்றி தொடர்ந்து பயன்படுத்துவர்கள்... ஆகியோர்கள் இத்தகைய மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளால் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.
இவர்கள் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் அறிவுரையின்றி மாத்திரைகளை தொடர்ந்து பாவிக்கக்கூடாது.
அதே போல் இரத்த அழுத்தப் பாதிப்பிற்குரிய மாத்திரைகளையும் மருத்துவர்களின் பரிந்துரையின்றி தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். இதன் மூலம் உங்களது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
அதே தருணத்தில் இது போன்ற பாதிப்பிற்கு ஆளானவர்களை மருத்துவர்கள் உரிய சமயத்தில் இதற்கான பிரத்யேக நிவாரண சிகிசையை வழங்கி, உங்களது சிறுநீரகத்தின் செயல்பாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டெப்பர். இருப்பினும் மாத்திரைகளை பாவிக்கும் முன், அதன் பக்கவிளைவுகள் குறித்தும், வைத்தியர் எடுத்துரைக்கும் அறிவுரையை முழுமையாக பின்பற்றுங்கள்.