இன்றைய சூழலில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்மணிகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், இத்தகைய புற்றுநோய் பாதிப்புக்கு முன்னதாக கர்ப்பப்பை வாய் இன்ட்ராபிதிலியல் நியோபிளாசியா எனும் நோய்க்குறி ஏற்படுகிறது. இந்த நோய்க்குறி எம்முடைய உடம்பில் குறிப்பாக கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் புற்றுநோயை உண்டாக்கும் அசாதாரண செல்லின் வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது.
இங்கு அசாதாரண முறையில் சேகரமடைந்திருக்கும் செல்கள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்னரே கண்டறிந்தால், இதற்குரிய பிரத்யேக சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெண்களின் கருப்பை வாயின் மேற்பரப்பில் அசாதாரண செல்கள் உண்டாகின்றன. இந்த நிலையிலேயே இந்த அசாதாரண செல்களின் வளர்ச்சியை கண்டறிந்தால், அதனை புற்றுநோயாக மாறுவதற்கு முன்னரே சிகிச்சை அளித்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க இயலும்.
வைரஸ் தொற்றால் ஏற்படும் இத்தகைய பாதிப்பை அதற்கான தொடக்க நிலை அறிகுறிகளுடன் கண்டறிந்தால், பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்தி பிறகு, சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம்.
கீழ்ப்பக்க முதுகு வலி, இடுப்பு வலி, மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு, திருமணமான பெண்களுக்கு உடலுறவுக்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கு, சில பெண்களுக்கு அவர்களுடைய பிறப்புறுப்பில் இருந்து வெளியாகும் விரும்பத்தகாத துர்நாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக புற்றுநோய் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
இதன்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, அவை புற்றுநோயின் பாதிப்பா? அல்லது புற்றுநோய்க்கு முன்னர் ஏற்படும் நோய்க்குறியா என்பதனை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சைகளை பெறலாம்.
உங்களுக்கு ஏற்பட்டிருப்பது புற்றுநோயாக மாறக்கூடிய அல்லது புற்றுநோய்க்கு முன்னரான நோய்க்குறி என்பதனை உறுதிப்படுத்திக்கொண்டால், அதற்கு கிரையோதெரபி, தெர்மல் அப்ளேஷன், லேசர் அப்ளேஷன், ரேடியோ ஃப்ரீகுவன்ஸி அப்ளேஷன், ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட், போட்டோ டைனமிக் தெரபி போன்ற நவீன சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.
பொதுவாக கர்ப்பப்பை வாய் இன்ட்ராபிதிலியல் நியோபிளாசியா எனப்படும் புற்றுநோய்க்கு முன்னரான நோய்க்குறிக்கு மேற்கூறிய சிகிச்சைகள் முழுமையான பலனை வழங்கும்.
மேலும், இந்த நோய்க்குறி உருவானதிலிருந்து, கர்ப்பப்பை புற்றுநோயாக மாறுவதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகள் வரை கால அவகாசம் இருக்கிறது. இதனால் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை துல்லியமாக அவதானித்து, அவை கர்ப்பப்பை வாய் புற்றுநோயா? அல்லது கர்ப்பப்பை புற்றுநோயின் முன்னரான நோயின் அறிகுறியா? என்பதனை கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை பெற்று, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.