இன்றைய சூழ்நிலையில் எம்மில் பலருக்கும் வயிற்றுப்போக்கு, தசை பிடிப்பு, மலச்சிக்கல், அஜீரணம் உள்ளிட்ட செரிமான தொந்தரவுகளுக்கு அடிக்கடி முகம் கொடுக்கிறார்கள். இதற்கு மருத்துவ நிபுணர்கள் எம்முடைய குடல் பகுதியில் செரிமானத்திற்கு பேருதவி செய்யும் பாக்டீரியாக்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுவது தான் காரணம் என விவரிக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக பெரும்பாலான மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்காக தற்போது பல நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி முழுமையான நிவாரணத்தை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய வயிற்றுப் பகுதியில் குறிப்பாக குடல் பகுதியில் 400 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. இவை குடல் நுண்ணுயிரிகள் என்றும் விவரிக்கப்படுகிறது. இவை செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போரிடுகின்றன.
அத்துடன் விற்றமின் சத்தினை ஒருங்கிணைக்கவும் தம்முடைய பங்களிப்பை அளிக்கின்றன. அதே தருணத்தில் எம்முடைய குடல் பகுதியில் தீமை விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியாக்கள் ஆகியவையும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் சம நிலையில் இருக்க வேண்டும். இந்த சமநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, நல்ல பாக்டீரியாக்கள் எண்ணிக்கை குறைந்தும், தீய பாக்டீரியாக்களின்.. வைரஸ்களின்.. எண்ணிக்கை அதிகரித்தால் அல்லது அவை கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடைந்தால் அது நோயை உண்டாக்குகிறது. குறிப்பாக ஓட்டோ இம்யுன் டிசிஸ் எனப்படும் சொரியாசிஸ் என்று நோயையும், ஒஸ்துமா என்ற சுவாசம் தொடர்பான பாதிப்பையும் இவை ஏற்படுத்துகின்றன.
மது அருந்துதல், சர்க்கரை அல்லது புரத சத்தினை இயல்பான அளவை விட அதிக அளவு உட்கொள்ளல், ஆன்ட்டி பயாடிக் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளல், நீண்ட கால மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இத்தகைய சமநிலையற்றத் தன்மை ஏற்படக்கூடும்.
செரிமான கோளாறுகள், அஜீரண தொந்தரவுகள், அடிக்கடி வாயு பிரிதல் அல்லது வீக்கம் ஏற்படுதல், மலம் வெளியேறும் போது சளி கலந்திருத்தல், வயிற்றுப்போக்கு, வயிற்று தசை பிடிப்பு, மலச்சிக்கல், நாட்பட்ட வாய் துர்நாற்றம் ஆகியவை இத்தகைய பாதிப்பின் அறிகுறிகளாகும். வேறு சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம், மலக்குடல் வாய் அரிப்பு, சோர்வு, கவனம் செலுத்துவதில் இடையூறு, பதட்டம் போன்ற அறிகுறிகளும் இருக்கும்.
இத்தய அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மல பரிசோதனை, ஹைட்ரோஜன் ப்ரீத் பரிசோதனை, திசு பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு டிஸ்பயோஸிஸ் பாதிப்பினை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதனைத் தொடர்ந்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சை, உணவு முறையில் மாற்றம் குறிப்பாக பழங்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகமாக உணவு பட்டியலில் இணைக்க வேண்டும் என பரிந்துரைப்பர். செயற்கை இனிப்பு, புரதச்சத்து, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், மது ... உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைப்பர்.
உணவு முறையை சீர்படுத்தியும், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டால்... எம்முடைய குடல் பகுதியில் உள்ள நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, இத்தகைய தொல்லைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம்.