உலகளவில் 20 வயதுக்கு மேற்பட்ட லட்சம் நபர்களில் 732 நபர்களுக்கு டிஸ்டோனியா எனப்படும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இயக்கவியல் தொடர்பான நரம்பியல் பாதிப்பான இதற்கு, தற்போது அழகியல் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போடெக்ஸ் எனும் மருந்தியல் சிகிச்சை பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
டிஸ்டோனியா என்பது நரம்பு இயக்க கோளாறாகும். இது எம்முடைய விருப்பமின்றி தசைகளை தன்னிச்சையாக சுருங்க வைத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக எம்முடைய உடலில் உள்ள கழுத்து, கண் இமை, கை விரல்கள், தோள்பட்டை, தாடை, நாக்கு, குரல் நாண் போன்றவை பாதிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சிலருக்கு வலியுடன் கூடிய அசௌகரியம் ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு நாளாந்த பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எம் ஆர் ஐ அல்லது சிடி ஸ்கேன் பரிசோதனை, எலெக்ட்ரோமயோக்ராபி, பாரம்பரிய மரபணு சோதனை ஆகிய சோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையையும், பாதிப்பிற்கான காரணத்தையும் மருத்துவர்கள் துல்லியமாக அவதானிப்பார்கள்.
எம்முடைய விருப்பமின்றி தன்னிச்சையாக தசைப் பகுதிகளில் சுருக்கம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்துவதால்.. இதற்கு காஸ்மெடாலஜி எனப்படும் அழகியல் சிகிச்சை துறையில் பயன்படுத்தப்படும் போடெக்ஸ் எனும் மருந்தினை இதற்கு நிவாரணமாக வழங்குவர்.
இத்தகைய சிகிச்சையினை மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொண்டு நிவாரணம் பெறலாம்.
சிலருக்கு எப்பகுதியில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை பொறுத்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சையும் வழங்கி நிவாரணம் வழங்குவர்.
இதன்போது ஒக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி, ஸ்ட்ரெட்சிங் போன்ற சிகிச்சைகளையும் இணைத்து வணங்கி நிவாரணத்தை அளிப்பர். வெகு சிலருக்கு மட்டுமே டீப் பிரைய்ன் ஸ்டிமுலேஷன், செலக்டிவ் டிநெர்வேசன் ஆகிய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணத்தை வழங்குவர்.