மாரடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை
09 Jan,2024
எம்மில் பலரும் மாற்றி அமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறையின் காரணமாக மிக இளம் வயதிலேயே மாரடைப்பு, நெஞ்சு வலி உள்ளிட்ட இதய பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
மேலும் வயது வேறுபாடின்றி இரு பாலினருக்கும் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்த தருணத்தில் மருத்துவத்துறையினர் இதயம் தொடர்பான பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்குவதற்கான புதிய மருத்துவ சிகிச்சை முறைகளையும் கண்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ட்ரக் இலூட்டிங் பலூன் ( Drug Eluting Balloon) என்ற நவீன சத்திர சிகிச்சை முறையை கண்டறிந்திருக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் இதயம் பாதிக்கப்பட்டிருந்தால்... அவர்களுக்கு மருத்துவர்கள் எக்கோகார்டியோகிராம், எலக்ட்ரோகார்டியோகிராம், ஸ்ட்ரெஸ் டெஸ்ட், நியூக்ளியர் ஸ்ட்ரெஸ் டெஸ்ட், ஹார்ட் சிடி ஸ்கேன், ஒஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவர்.
சிலருக்கு அவர்களின் இதயத் தசைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை அகற்ற மருந்தியல் சிகிச்சைகளை வழங்குவர். வேறு சிலருக்கு ஸ்டென்ட்டை பொருத்தி முழுமையான நிவாரணத்தை வழங்குவர். வேறு சிலருக்கு இதயத்தை திறந்த நிலையில் சத்திர சிகிச்சை செய்து பாதிப்பினை அகற்றி முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
இந்நிலையில் சிலருக்கு மட்டும் அவர்களுடைய இதயத் தசையில் உள்ள ரத்த குழாய்கள் சுருங்கி இருப்பதன் காரணமாக ஸ்டென்ட்டை பொருத்தவோ.. அல்லது திறந்த நிலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளாத நிலையோ இருக்கும். இவர்களுக்கு தற்போது கண்டறியப்பட்டிருக்கும் டிரக் இலூட்டிங் பலூன் எனும் சத்திர சிகிச்சை முறை மிகுந்த பலன் அளிக்கும். இத்தகைய சிகிச்சையின் போது மிக மெல்லிய இரத்தக் குழாய் வழியாகவும் (ஒரு மில்லி மீற்றர் அளவிற்கு கூட) இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இயலும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருந்துகள் இதய தசைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை எளிதாக நீக்குவதுடன், குறைந்தபட்சம் ஆறு மாத காலம் வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் திறன் வாய்ந்தவை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.