ஒற்றைத் தலைவலிக்கு என்ன செய்யலாம்?
17 Dec,2023
சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் உண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு முன், உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புராஜெஸ்ட்ரான் சுரப்பு அளவுகள் குறையத் தொடங்கும். இந்தத் திடீர் மாற்றமே ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகிறது.
பெண்களுக்கு மாதவிலக்கு அல்லாத சமயத்தில் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் மருந்துகளுக்கு கட்டுப்படும். ஆனால், மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பெரும்பாலும் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை.
மேலும், மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி அதிக நேரம் நீடிக்கவும் செய்கிறது.
ஒற்றைத் தலைவலிக்கான முழுமையான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது.
அதீத ஒளி, ஒலி போன்ற ஒற்றைத் தலைவலி பிரச்சினையை அதிகரிக்கும் காரணிகளை உணர்ந்து, அவற்றைத் தவிர்ப்பது அவசியம். அதேவேளை, ஒற்றைத் தலைவலிக்கு எக்காரணத்தைக் கொண்டும் சுய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது.
பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சற்றே விலகியிருப்பது, எதையும் விரும்பிச் செய்வது என்பன மூலம் ஒற்றைத் தலைவலி பிரச்சினை தொடராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
கோபம், ஏமாற்றம் இல்லாத அமைதியான வாழ்க்கை முறை, யோகா,-தியானம் போன்ற மனதை ஆற்றுப்படுத்தும் விடயங்களை தினமும் செய்தல் மூலம் ஒற்றைத் தலைவலி ஏற்படும் கால இடைவெளியை நீட்டிக்கவும் தலைவலிக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை தவிர்க்கவும் முடியும்.