.
பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயாகும்.
புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இந்த நோய்க்குக் காரணம், சிசுக்களில் உள்ள GDF15 என்ற ஹார்மோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது கர்ப்பிணிப் பெண்களுடைய மூளையின் அடிப் பாகத்தில் உள்ள மிகச்சிறிய பகுதியில் செயல்படும் ஹார்மோன் ஆகும். இது குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தி, வாந்தியை உண்டாக்குகிறது. ஜிடிஎஃப்15 ஹார்மோனால் சில கர்ப்பிணிப் பெண்கள் நாளொன்றுக்கு 50 முறைகூட வாந்தி எடுக்க நேரிடுகிறது.
.
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் ஓராஹில்லி, "ஒரு தாய் இந்த ஹார்மோனால் எவ்வளவு எளிதாகத் தூண்டப்படுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் சிரமப்படுவார்,” என்று கூறினார்.
"இதை அறிந்து கொள்வதன் மூலம் இதை எவ்வாறு தடுக்க முடியும் என்பதற்கான வழி கிடைக்கிறது," என்று அவர் கூறினார்.
நூறு கர்ப்பிணிப் பெண்களில் 1 முதல் 3 பேர் ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது கருவின் உயிரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பாதிக்கப்படும் பல பெண்களுக்கு நீரிழப்பைத் தடுக்க ஊசி மூலம் திரவச்சத்து செலுத்தப்பட வேண்டும்.
.
தனது HG அனுபவம் மோசமாக இருந்ததால், கருக்கலைப்பு செய்யலாமா என்று யோசித்ததாக 35 வயதான சூசி வெரில் கூறுகிறார்.
வெரில் மூன்று குழந்தைகளின் தாய். அவர் தனது மூன்று கர்ப்பங்களில் இரண்டின்போது இந்த நோயை அனுபவித்தார். அவர் தனது நிலையை பொதுவில் பகிர்ந்துகொண்டதால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தினமும் அவரைத் தொடர்பு கொள்கின்றனர்.
"இனிமேல் வாழ முடியாது என்ற மனநிலை எனக்கு இருந்தது, என் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை," என்று அவர் விளக்கினார். "நான் என் கர்ப்பத்தைத் தொடர வேண்டாம் என்று கருதினேன், ஏனென்றால் அது மோசமாக இருந்தது, HG இருக்கும்போது இது மிகவும் பொதுவானது,” என்றார்.
"நான் மூச்சுவிட்டால்கூட குமட்டல் ஏற்படும். இரண்டு கர்ப்ப காலத்தின்போதும் எனது அறையில் ஐந்து மாதங்களுக்கு பூட்டப்பட்டிருந்தேன். உயிர்வாழ என் உலகத்தை மிகச் சிறியதாக மாற்றிக் கொண்டேன், என் கணவர் தான் என்னை கவனித்துக் கொண்டார்," என்று வெரில் கூறுகிறார்.
"அது எல்லாவற்றையும் பாதிக்கிறது, குழந்தை பிறக்கும் முன் ஒவ்வொரு நாளையும் எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்றுதான் கடந்து வந்தேன்,” என்றார்.
.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள் GDF15 ஹார்மோனுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என்று முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டினாலும், புதிய ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் "இதுவரை, இந்த ஹார்மோனால் ஏன் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்ற புரிதல் இல்லை,” என்று கூறினார்.
கேம்பிரிட்ஜ் மற்றும் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்கள், அமெரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, நேச்சர் (Nature) இதழில் வெளியிட்ட ஆய்வில், நோயின் தீவிரம் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனின் அளவைப் பொருத்தது என்றும், அதற்கு முன்பு அந்த ஹார்மோன் உடல் எவ்வளவு இருந்தது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கண்டறிந்தனர்.
இந்த ஆய்வில், கேம்பிரிட்ஜில் உள்ள ரோஸி மகப்பேறு மருத்துவமனையில் பெண்களை ஆய்வு செய்தனர். ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) அபாயத்தை அதிகரிக்கும் ஒரு மரபணு மாற்றம் கொண்ட பெண்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தனர்.
மேலும், கர்ப்பத்திற்கு முன்பே மிக அதிக அளவு GDF15ஐ உண்டாக்கும் ரத்த நோயான பீட்டா தலசீமியா பாதித்த பெண்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
"இந்த ஹார்மோன் தாயின் மூளையில் பொருந்துவதைத் தடுப்பதே, இந்த நோயைக் குணப்படுத்தும் பாதுகாப்பான, பயனுள்ள வழியாகும்,” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வளர்சிதை மாறுபாட்டு நோய்கள் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ஓராஹில்லி விளக்கினார்.
.
விவியென் குமாருக்கு, இரண்டு குழந்தைகளின் தாய், கர்ப்ப காலத்தில் மணிக்கு 10 முறை குமட்டல் ஏற்பட்டது. உறங்கும்போது மட்டுமே வாந்தி எடுக்கவில்லை.
"இது வெறும் காலை நேரத்தில் ஏற்படும் வாந்தி அல்ல, அது சகிக்க முடியாதது," என்று அவர் கூறினார். "ஒருமுறை அனுபவித்தால், மீண்டும் மீண்டும் நினைவில் இருக்கும், எப்போதும் உங்களுடன் இருக்கும்,” என்றார்.
"உலகத்திலிருந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு, நான் மட்டும் தனியாக ஒரு உலகத்தில் இருப்பது போலவும் உணர்ந்தேன். இதற்கான முடிவு இருப்பதாகவே அப்போது தோன்றவில்லை. வீட்டைவிட்டு வெளியேறுவதே மிகவும் கடினம்,” என்றார்.
"ஆனால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் கணவர் மற்றும் தாயாரின் முழு ஆதரவு கிடைத்தது. அவர்கள் இல்லாமல், என்னால் குழந்தை பெற்றிருக்க முடியாது," என்றார். மூன்றாவது முறையாக கர்ப்பமானபோது, அவர் எட்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துவிட்டது.
"நான் பலவிதமான மருந்துகளை எடுத்தேன். எனக்கு , ஸ்டிராய்டுகளை வழங்கினார்கள். அது வேலை செய்யவில்லை. துரதிருஷ்டவசமாக குழந்தை உயிர் பிழைக்கவில்லை," என்று அவர் கூறினார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் கர்ப்பகால ஆதரவு அமைப்பின் தலைமை நிர்வாகி ஷார்லோட் ஹோவ்டன், இது நீண்டுகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ பிரச்னை என்றார்.
"ஆராய்ச்சியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது," என்று ஹோவ்டன் கூறினார். "ஏனென்றால் பலர் இது ஆராய்ச்சி செய்வதற்கான விஷயம் என்றே கருதவில்லை. . அது வெறும் காலையில் ஏற்படும் லேசான வாந்திதானே. நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று நினைக்கின்றனர்.