தும்மலை அடக்கியதால் கிழிந்த சுவாச குழாய்.
15 Dec,2023
.ஸ்காட்லாந்து நாட்டில் காரில் சென்று கொண்டிருந்த ஒரு 30 வயது நபருக்கு காய்ச்சல் காரணமாக தும்மல் வந்துள்ளது. ஆனால் அவர் தன் மூக்கு, வாயை மூடி தும்மலை அடக்கி உள்ளார். இதனால் கழுத்து வலி ஏற்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்தபோது அந்த நபரின் சுவாச குழாயில் 2 மி.மீ. அளவுக்கு கிழிசல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, “முதல்முறை இதுபோல சுவாச குழாய் கிழிந்த ஒருவரை பார்க்கிறோம். தும்மல் என்பது மனிதனின் உயிரியல் செயல்முறை.
தும்மலின்போது வாய், மூக்கு இரண்டையும் மூடி கொண்டால், மேல்சுவாச குழாயில் உருவாகும் அழுத்தம், தும்மலின் அழுத்தத்தை விட 20 மடங்கு அதிகமாகும். இந்த அழுத்தம் காரணமாக சுவாச குழாயில் கிழிசல் ஏற்பட்டுள்ளது. மார்பில் காற்றும் அதிகம் குவிந்திருந்தது. கழுத்தின் இருபுறமும் வீங்கியிருந்தது. ஆனால் அந்த நபருக்கு சுவாசிப்பது, விழுங்குவது, பேசுவது ஆகிய செயல்பாட்டில் எந்த பிரச்னைகளும் இல்லை. காயம் ஆறிவிடும்” என்று தெரிவித்துள்ளனர்.