பன்றி இதயம் பொருத்தப்பட்ட மனிதர். 40 நாட்களுக்குப் பிறகு மரணம்!
02 Nov,2023
அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20-ம் தேதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் பேஸட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6 வாரங்கள் வரை நலமோடு இருந்த லாரன்ஸ், திங்கள்கிழமை (அக்.30) அன்று உயிரிழந்துள்ளார். "லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, சீட்டுக்கட்டு விளையாடுவது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வந்தார். ஆரம்ப நாள்களில் அவர் உடல், மறுப்பிற்கான அறிகுறிகளைக் காட்டினாலும் இது வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சையிலும் நடக்கக் கூடியது தான். மருத்துவர்களின் முயற்சியால் அவர் அக்.30 வரை பிழைத்திருந்தார்" என மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இன்று பெருமளவில் நடைபெற்று வந்தாலும் மனித உறுப்புகள் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல. இந்த நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு ஏற்றாற்போல மரபணு மாற்றம் செய்யப்பட்டு பொருத்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேரிலாண்ட் மருத்துவமனை மேற்கொள்ளும், பன்றியின் இதயத்தை மனிதர்களுக்கு பொருத்தும் இரண்டாவது அறுவை சிகிச்சை இது. முதல் அறுவை சிகிச்சை, 2022 ஜனவரி 7-ல் டேவிட் பெனட் என்பவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அவர் இரண்டு மாதங்கள் வரை உயிருடன் இருந்தார்.
இன்னும் இந்த ஆராய்ச்சியில் நீண்ட கால நோக்கில் மேம்பட்ட முடிவுகள் கிடைக்கப் பெறலாம் என நம்பப்படுகிறது.