இன்று பலரது வீடுகளில் குழந்தைகளுக்கு நிகரான இடத்தை நாய்களும் பெற்றுள்ளன. மக்களுக்கு நாய் வளர்ப்பதன் மீதுள்ள ஆர்வத்தால் நாய்களுக்கான விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் உரிய வழிகாட்டல் இல்லாததால், நாய் வளர்ப்பவர்கள் அவற்றை முத்தமிடுவது, மடியில் வைத்துக் கொஞ்சுவது, கட்டிப்பிடித்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்கின்றனர். மேலும் நாய்களுக்கு உரிய பயிற்சி அளிக்காமலும் விட்டுவிடுகின்றனர்.
இதனால் விலங்குகளிடமிருந்து மனிதருக்குப் பரவும் விலங்கியல் (Zoonotic) நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்தில் பரவிய நிபா வைரஸும் வௌவால்கள் வழியாக மனிதனுக்குப் பரவும் நோய்க்கான ஓர் உதாரணம்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை தங்களது வளர்ப்பு நாய்களை கொஞ்சி முத்தமிட்டு வருகின்றனர். நாய்களை முத்தமிடுவது பாதுகாப்பானதா, அதனால் நோய்கள் ஏற்படுமா எனப் பலதரப்பட்ட கேள்விகளும் உங்களுக்கு எழலாம்.
நாய்கள் ஏன் நம்மை நக்குகின்றன?
நாய்கள், நாய்க்கடி, செல்லப்பிராணிகள்பட மூலாதாரம்,GETTY IMAGES
நாய்கள் ஏன் நம்மை நக்குகின்றன என்பதைப் பற்றி அறிய கோவையைச் சேர்ந்த நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவியிடம் பிபிசி தமிழ் பேசியது.
பொதுவாக மோப்பமிடுவது, வாலை ஆட்டுவது, குரைப்பது போன்றவை நாய்களின் இயல்பான மொழி. மனிதனாக இருந்தாலும், வேறு உயிரினமாக இருந்தாலும் அவை இந்தச் செயல்களின் மூலமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன என்கிறார் அவர்.
“இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நமது முகம், அக்குள், அந்தரங்கப் பகுதி ஆகியவற்றை மோப்பம் பிடிப்பதால் நாய்கள் நம்மைப் பற்றிய பல தகவல்களைப் பெறுகின்றன. என்ன சாப்பிட்டோம், எங்கு சென்று வந்தோம், என்ன மனநிலையில் இருக்கிறோம் போன்றவற்றைக் கூட அவற்றால் உணர முடியும்,” என்கிறார் ஸ்ரீதேவி.
மேலும் பேசிய அவர், “ஒரு நாய் மற்றொரு நாயைப் பார்த்தால் தன் மொழியில் உரையாடும். அவற்றின் உடல் பாகங்களை நக்குவது, விளையாட்டாகக் கடிப்பது போலத்தான் நம்மிடமும் அதீத அன்பின் வெளிப்படாக நம் முகத்தை நக்குகிறது. சில நேரங்ளில் உங்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் முகம் மற்றும் கைகளை நக்கும்,” என்கிறார் ஸ்ரீதேவி.
நாய்களை எப்படிப் பழக்க வேண்டும்?
சரி, நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாய் உங்களை அதிகமாக நக்கிக் கொண்டே இருந்தால் அதை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஸ்ரீதேவி.
முதலில் நாய்கள் உங்கள் முகத்திற்கு அருகில் வரும்போது அதை ஊக்கப்படுத்தாதீர்கள்.
முத்தமிடுவதற்குப் பதிலாக அதனுடன் கை குலுக்குங்கள்.
அதனுடன் தொட்டு விளையாடும் போக்கை சிறுகச் சிறுகக் குறைக்க வேண்டும்.
ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் நாய்களின் முடி உதிர்வதைப் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும்.
சிறு வயதிலிருந்தே அன்றாடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என அவற்றுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
எந்தவொரு நாய் உரிமையாளரும் தங்களது நாய்களுக்குத் தினமும் பல் துலக்கிவிடுவது இல்லை, அதனால் நாய்களின் பல் இடுக்குகளில் கிருமிகள் இருக்கும்.
நாய்களை முத்தமிடுவதால் நோய் பரவுமா?
நாய்களை முத்தமிடுவதால் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுமா என்பதைப் பற்றி அறிந்துகொள்ள, சென்னையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சங்கரிடம் பேசினோம்.
அவர் கூறுகையில், சில வீடுகளில் குழந்தைகள் இல்லை என்பதற்காக நாய்களைக் குழந்தையாகப் பாவிப்பதாகக் கூறுவார்கள். தங்கள் கூடவே படுக்கை முதல் சமையலறை வரை எடுத்துச் செல்வார்கள்.
ஆனால் நாய் ஒரு விலங்குதான். நாய்களுக்கு என இருக்கும் சரியான வழிகாட்டல் படி அவற்றைப் பராமரிக்க வேண்டும் எனவும், அப்படிச் செய்யவில்லை என்றால் நோய்த்தொற்று ஏற்படும் எனவும் கூறினார்.
“நாய்களின் பல் இடுக்குகளில் கிருமிகள் இருக்கும். எந்தவொரு நாய் உரிமையாளரும் தங்களது நாய்களுக்குத் தினமும் பல் துலக்கிவிடுவது இல்லை. அப்படி துலக்கினாலும் நாய்களின் வாயில் கிருமிகள் அதிகம் இருக்கவே செய்யும்,” என்கிறார் அவர்.
அதனால் நாய்களை நம் உடலில் முத்தமிடவோ, நக்கவோ அனுமதிக்கக்கூடாது, அதேபோல் நாமும் அவற்றை முத்தமிடக் கூடாது என்கிறார் கால்நடை மருத்துவர் சங்கர்.
மேலும், “நாய்களுக்கு குடல் புழுக்கள் அதிகமாக இருக்கும். அவற்றோடு பழகப் பழக நமக்கும் இந்தத் தாக்கம் ஏற்படக்கூடும். சருமம் தொடர்பான பல நோய்கள் ஏற்படக்கூடும்,” என்கிறார்.
நாய் போலவே, பூனை, குதிரை, பன்றி, எலி என மேலும் பல விலங்குகளில் இருந்து லெப்டோஸ்பீரோசிஸ் என்ற பாக்டீரியா பரவக் கூடும். இது விலங்குகளின் சிறுநீர் மற்றும் உமிழ்நீரால் பரவுகிறது.
மனிதர்களின் மூக்கு, வாய், கண்கள் மற்றும் தோலில் காயங்கள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் மனிதர்களுக்கும் பரவும். இதன் தாக்கமாகக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும்.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது மிகவும் அவசியம், என்கிறார் மருத்துவர் சங்கர்.
பயந்து நாய்களோடு பழகாமல் இருப்பதும் தவறு, அதே நேரம் சுத்தமாகவும் இருக்க வேண்டும், என்கின்றனர் மருத்துவர்கள்.
நாய் வாங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டியவை
மேலும், ஒரு கட்டத்தில் நாய்கள் கண்டிப்பாக மனிதரின் துணையையும் அன்பையும் எதிர்பார்க்கும். அதனால் தொற்றுகளுக்குப் பயந்து அவற்றோடு பழகாமல் இருப்பதும் தவறு என்கிறார் கால்நடை மருத்துவர் சங்கர். அவற்றோடு விளையாட வேண்டும், அதேவேளையில் சுத்தமாகவும் இருக்க வேண்டும், என்கிறார் அவர்.
“குறிப்பாக நாய்களை தங்கள் படுக்கை வரை அனுமதிக்கும் உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் எந்த நோய் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பைக் வாங்கும் முன் பைக் ஓட்டக் கற்றுக்கொண்டுதான் வாங்குவோம். அதேபோல நாய் வளர்க்கும் முன்பு அதற்குத் தடுப்பூசி போடுவது, குளிப்பாட்டுவது, சீர்ப்படுத்துவது, நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது என அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்கிறார் மருத்துவர் சங்கர்.
நாய்களைப் பாதுகாப்பாக வளர்க்கும் முறை பற்றிப் பேசிய கால்நடை மருத்துவர் சங்கர், நாய்களை பிறந்த உடனே அவற்றின் தாயிடமிருந்து எடுத்து வளர்க்கக்கூடாது, எனவும் அவை குறைந்தது 60 நாட்களாவது அவற்றின் தாயிடம் இருந்தால்தான் அவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் எனவும் கூறினார்.
“அவற்றுக்கு 40 நாட்களில் DHPP என்ற தடுப்பூசி போட வேண்டும். அதன் பிறகு வருடத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும்,” என்றார்.
“நாய்களின் எச்சில் நம் உடலில் எங்கும் படக்கூடாது. குறிப்பாக நம் உடலில் காயம் ஏற்பட்ட இடங்களில். வேறு எதாவது நோய் என்றால் நுண்ணுயிர்க்கொல்லிகளை வைத்து சரி செய்யலாம். ஆனால் ரேபீஸ் நோய்த்தொற்று ஏற்பட்டால் சரி செய்வது மிகவும் கடினம்,” என்றார்.
“ஏனெனில் ரேபீஸ்க்கு மூன்று வடிவங்கள் இருக்கின்றன. அதில் ஆக்டிவ் ரேபிஸ் அறிகுறிகள் வெளியில் தெரியும். டம்ப் (Dump) எனபடும் வடிவம் வெளியில் தெரியாது. அந்த நாய்களுக்கு ரேபீஸ் இருப்பது அவ்வளவு எளிதாக வெளிப்படையாகத் தெரியாது,” என்றார்.
மேலும், நாய்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட்டதால் ரேபீஸ் வராது என்று சொல்ல முடியாது, என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் தொடர்ந்த அவர், நாய் நம் கால்களில் கடித்தால் அந்த வைரஸ் தொற்று நரம்பு மண்டலத்தில் இருந்து நம் தலைக்கு ஏற ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, ஒரு வருடமோகூட ஆகலாம். அதுவே கழுத்தில் கடித்தால் விளைவு உடனே தெரியும், என்கிறார்.
நாய்களுக்கு ஏற்படும் உண்ணித் தொற்றுகளைப் பற்றிப் பேசிய மருத்துவர் சங்கர், ஆண் உண்ணிகள் சிலந்தி போலவும், பெண் உண்ணிகள் வண்டு போலவும் இருக்கும் என்றார்.
“ஆண் உண்ணிகள் நாய்களின் உடலிலேயே இருக்கும். ஆனால் பெண் உண்ணிகள் இனப்பெருக்கம் முடிந்தவுடன் நாய்களின் உடலில் இருந்து கீழே விழுந்துவிடும். அவை வீட்டில் எங்காவது இடுக்குகளில் தங்கியிருக்கலாம். அவை மனிதர்களின் உடலில் ஏறினால் அது சரும பிரச்னைகளுக்கும் நோய்த் தொற்றுக்கும் வழி வகுக்கும்,” என்றார்.
அதனால் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் கண்டிப்பாக அதை முறையாகச் சீர்ப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, "வீட்டில் செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக அவற்றுக்குக் குடல் புழுக்களை அகற்ற மருத்துவம் செய்ய வேண்டும்," என்றார் மருத்துவர்