கண்ணில் அல்சர் வருமா..? காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி!
26 Sep,2023
இங்கிலாந்தில் ஸ்டெஃப் கராஸ்கோ என்ற 25 வயதான பெண், தனது காண்டாக்ட் லென்ஸ்கலினால் ஏற்பட்ட புண் காரணமாக தனது கண்பார்வையை கிட்டத்தட்ட இழந்துள்ளார். ஆரம்பத்தில், அவர் கண்ணில் அரிப்பு ஏற்படுவதை சாதாரண லென்ஸ் எரிச்சல் என்று நினைத்து இருந்துள்ளார். அதை பெரிது படுத்தவில்லை. ஆனால் எரிச்சல் அதிகமாகவெ கண் மருத்துவரை அந்தப் பெண் அனுகியபோது தான் நிலைமையின் விபரீதம் புரிந்துள்ளது.
அந்தப் பெண் கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. அவரது கண் மருத்துவரான ஜாக் ப்ரெண்டன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அவரை ஒரு சிறப்பு கண் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளார். ஸ்டெஃப்-ன் பார்வை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் கண்ணிற்கான சிறப்பு மருத்துவமனையில் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். சிகிச்சையின் போது கண்ணில் ஏற்பட்ட புண்னை குணப்படுத்தும் முயற்சியாக தினமும் 72 முறை கண்ணில் சொட்டு மருந்து விடப்பட்டது.
இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் ரெக்ரூட்மெண்ட் கன்சல்டண்டாக பணிபுரியம் அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவத்தை ஒரு ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, கண் நோய் சிறப்பு மருத்துவர் ஜாக் மற்றும் மருத்துவக் குழு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்தது. அதோடு என்னை மனரீதியாகவும் தேற்றினார். அவரை நன்றியுடன் நினைவு கூறுகிறேன் என்றார்.
ஒரு நாளைக்கு 72 முறை சொட்டு மருந்து செலுத்தியும் ஸ்டெஃப் கராஸ்கோவின் கார்னியல் அல்சர் குணமடையவில்லை. இதனால் அவருக்கு கார்னியா மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தது மருததுவக் குழு. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவரது பார்வை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் அவர் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு எப்போதும் போல் அவர் தனது வேலைகளை வழக்கமாக செய்ய முடியும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்காவிட்டால் ஸ்டெஃப் தனது பார்வையை முற்றிலும் இழந்திருப்பார். இந்த சம்பவம், நமக்கு உடலில் ஏற்படும் அசெளகரியங்களை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை தனக்கு கற்றுக் கொடுத்தது என்கிறார் அந்தப் பெண். மீண்டும் பார்வை பெற்ற வகையில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஸ்டெஃப்.
கார்டிஃப் குயின் தெருவில் இருக்கும் ஸ்பெக்சேவர்ஸ் கிளையில் பணிபுரியும் ஆப்டோமெட்ரிஸ்ட் ஜாக் ப்ரெண்டன் என்பவர் தான், ஸ்டெஃப் கராஸ்கோவின் கண்ணில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா தொற்று மிக மோசமானது எனவும், இதற்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து தான் அந்தப் பெண் மருத்துவமனையை நாடியுள்ளார்.
கார்னியல் அல்சர் ஒரு தீவிரமான கண் நோய் என்றும், தொடர்ந்து கான்டாக்ட் லென்ஸ்கள் அணிபவர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.