சர்க்கரை நோயை தொடக்க நிலையில் கண்டறிவதற்கான பிரத்யேக பரிசோதனை
09 Sep,2023
தெற்காசியா முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.
உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கும் இத்தகைய பாதிப்பை மாத்திரைகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் குணப்படுத்த இயலுமா? என பலரும் கேள்வி கேட்கிறார்கள்.
இது தொடர்பாக சர்க்கரை நோய் நிபுணர் ராஜேஷ் விளக்கமளித்து பேசுகையில்,
'' நீரிழிவு நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு முன் தொடக்க நிலை சர்க்கரை நோயாளிகள் என்றொரு நிலை உண்டு. இதனை மருத்துவ மொழியில் ப்ரீ-டயாபடீஸ் என குறிப்பிடுகிறார்கள்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வருமா? வராதா? என்பதனை குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் எனப்படும் பரிசோதனையை மேற்கொண்டு துல்லியமாக அவதானிப்பார்கள்.
இந்த பரிசோதனையின் முடிவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது அவை தொடக்க நிலையில் இருக்கிறதா? அல்லது எதிர்காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவாரா? என்பதனை துல்லியமாக அவதானிக்க இயலும்.
மேலும் அவர் தொடக்க நிலை சர்க்கரை நோயாளியாக இருந்தால் அவருக்கு மாத்திரைகள் எதுவும் வழங்காமல், உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சர்க்கரை நோயாளியாக மாறாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
மேலும் இவர்களுக்கு HBA1C எனும் பிரத்யேக பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். அதன் முடிவில் 5.8 முதல் 6.4 வரை இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்திய கூறு அதிகம் என அவதானிக்கலாம். இவர்களும் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை உறுதியாக பின்பற்றினால் சர்க்கரை நோயாளியாக மாறாமல் ஆரோக்கியமாக வாழ இயலும். மேலும் தொடக்கநிலை சர்க்கரை நோயாளிகள், லோ கார்போஹைட்ரேட் உணவு முறையை பின்பற்றினாலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். '' என்றார்.